அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஜனநாயகக் கட்சி சார்பில் இறுதியாக வாஷிங்டன் மாகாணத்தில் நடை பெற்ற உட்கட்சித் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் (68) வெற்றி பெற்றுள்ளார். சக போட்டியாளரான பெர்னி சாண்டர்ஸ் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஏற்கெனவே குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக தேர்வாகி உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு ட்ரம்பை (70) எதிர்த்து ஹிலாரி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் நியூயார்க்கின் முன்னாள் செனட் உறுப்பினருமான ஹிலாரி, அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.
எனினும் அடுத்த மாதம் பிலடெல்பியாவில் நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில் வேட்பாளர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இது குறித்து ஹிலாரி ட்விட்டரில், “வாஷிங்டன் மாகாணத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் மீது ஹிலாரி கடும் தாக்கு:
சமீபத்தில் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஒபாமா செயல்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஹிலாரி கூறும் போது, “அதிபர் ஒபாமா பற்றி டொனால்டு கூறியது அவமானகரமானது. சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை அவமதிக்கும் செயல். அதிபர் ஆவதற்கு அவருக்கு தகுதி இல்லை என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது” என்றார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments