குஜராத் மாநிலம் அகமதபாத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மதக்கலவரத்தின் போது குல்பர்க் வீட்டு வசதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கலவரம் கும்பல் அங்கிருந்த நபர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்து தீயிட்டு கொழுத்தியது. அங்கிருந்த கட்டிடத்திற்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னால் எம்.பி இஹ்ஸான் ஜாபரி உட்பட 69 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு 66 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு குஜராத் சிறப்பு செசன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் வெளியான தீர்ப்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அதுல் வைத்யா உள்பட 24 நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க நகரசபை உறுப்பினர் பிபின் படேல் உட்பட 36 நபர்களுக்கு எதிராக இருந்த ஆதாரங்கள் வலுவானதாக இல்லை எனவும் தெரிவித்து 36 நபர்களையும் விடுதலை செய்து தீர்பளித்தார் நீதிபதி பி.பி. தேசாய்.
நீரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் ஜூன் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தண்டனை வழங்குவது தொடர்பான வக்கீல்களின் விவாதங்கள் நடைபெற்று முடியாததால் தண்டனை விபரங்களை ஜூன் 9ஆம் தேதி ஒத்திவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான அனைத்து விவாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் தண்டனை விபரங்கள் இன்று தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வழக்கில் பா.ஜ.க தலைவர் உட்பட 36 நபர்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாபரியின் மனைவி ஜாகியா ஜாபரி கூறும்போது இந்த தீர்ப்பில் தனக்கு திருப்தி இல்லையெனவும், தொடர்ந்து நீதிக்காக தான் போராடுவேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments