சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் இறுதி வாரத்தில் திறக்கலாம் என தமிழக அரசுக்குத் தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை பரிந்துரை செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் தஞ்சாவூர் கிளை 11 ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் வழங்கல் திட்டக் கருத்துருவைத் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பி வருகிறது. நிகழாண்டிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து எதிர்பார்ப்பு, சாகுபடி பரப்பு, நீர்த் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, தயாரிக்கப்பட்ட பரிந்துரை கையேட்டை புதன்கிழமை வெளியிட்டனர்.
பிறகு, பேரவையின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் பி. கலைவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மேட்டூர் அணையில் நிகழாண்டு ஜூன் 1-ம் தேதி ஆரம்ப இருப்பாக 15 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. சாகுபடி காலமான ஜூன் முதல் ஜனவரி மாதம் வரை காவிரி நதிநீர் பங்கீடு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்புப்படி 182 டி.எம்.சி. தண்ணீரும், 50% நம்பகத்தன்மையின்படி 179 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேட்டூர் அணை இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு மொத்தம் 250 முதல் 265 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், குறுவை சாகுபடிக்கு ஜூலை மாதத்தில் நாற்றுவிட்டு சாகுபடி தொடங்கினால், நன்மையை விட தீமைகளே அதிகம் ஏற்படும். எனவே, ஜூலை மாதத்தில் அணை திறப்பது சிறந்த செயல் அல்ல.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் அணை திறக்கப்பட்டால், ஜனவரி மாதம் வரை சாகுபடிக்கு சுமார் 225 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அணை திறக்கப்பட்டால் 200 டி.எம்.சி. நீரைக் கொண்டும், வடகிழக்குப் பருவமழை நீர் மூலமும் சம்பா நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள இயலும்.
எனவே, நிகழாண்டு பயிர் சாகுபடிக்காக ஆகஸ்ட் மாத இறுதியில் மேட்டூர் அணையைத் திறக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி அணை திறக்கப்பட்டால், பாசனப் பகுதியில் நிலத்தடி நீர் மூலம் குறுவை பருவத்தில் 1 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 4.65 லட்சம் ஹெக்டேரிலும், தாளடி பருவத்தில் 80 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி எதிர்பார்க்கலாம். வாழை, கரும்பு போன்ற பிற பயிர்கள் 55 ஆயிரம் ஹெக்டேரில் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பா பட்டத்தில் குறைந்தது 2 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி முறை மேற்கொண்டால்தான், நீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி செய்ய முடியும்.
மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த ஏதுவாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு அமைக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அணை திறந்தவுடன் தண்ணீர் கடைமடை பகுதி வரை உடனடியாகச் சென்றடையும் விதமாக ஆறு, கால்வாய்களை முன்னதாகவே தூர் வாரி செப்பனிடவும், ஏரிகளைச் சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பரிந்துரையைத் தமிழக அரசுக்கு அனுப்பவுள்ளோம் என்றார் கலைவாணன்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவகுமார், பேரவையைச் சார்ந்த வ. பழனியப்பன், பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments