சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்போவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகேசன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவத்து வருகின்றனர். பேரறிவாளன், சாந்தன், முருகேசன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது மகன் உட்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி முதல்வரை சந்தித்து மனு அளிக்கப்போவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது "எனது மகனின் இளமைக்காலம் அனைத்தும் சிறையிலேயே கழிந்துவிட்டது. 19 வயதில் கைது செய்யப்பட்டான், இன்றோடு 25 ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஒரு முறை கூட எனது மகன் வெளியே வரவில்லை. எங்களது மகன்களை விடுதலை செய்யவேண்டும் என்கிற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா கருண அடிப்படையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது. எங்களது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதத்தில் வருகின்ற 11ஆம் தேதி அன்று வேலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை கோட்டை வரை மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தவுள்ளோம். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற உள்ளார்கள். 7 தமிழர்களின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், தமிழக இயக்கங்கள் என பல்வேறு துறையினர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். பேரணியாக வந்து கோட்டையில் முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments