தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்துகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவிலிருந்து வரும் “ஹெரிடேஜ்” பால் நிறுவனம் இன்று முதல் (ஆகஸ்ட் 1) லிட்டருக்கு ரூ.2 உயர்த்த பால் முகவர்களுக்கு தெரிவித்துள்ளது. வழக்கமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் விற்பனை விலையை உயர்த்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் 3 நாட்கள் முன்னதாக சுற்றறிக்கை வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை ஹெரிடேஜ் நிறுவனம் 24 மணி நேரத்திற்கு முன்பாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி தங்களின் பால் விற்பனை விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பல்வேறு வகையில் தமிழக மக்களை அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது அண்டை மாநில பால் நிறுவனங்களின் இந்த செயல்பாடுகள் பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பால் உற்பத்தி அபரிமிதமாக இருக்கிற சூழ்நிலையில் பால் கொள்முதல் விலையிலும், வாகன எரிபொருள் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் “ஹெரிடேஜ் நிறுவனம்” தங்களின் பாலுக்கான விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு ஹெரிடேஜ் நிறுவனத்தின் தன்னிச்சையான பால் விலை உயர்வுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும், ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதத்தில் “ஹட்சன்” நிறுவனமும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் “திருமலா” நிறுவனமும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ.2 வீதம் ஒவ்வொரு முறையும் உயர்த்தின.
முன்னணி தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த பால் விலை உயர்வை தமிழக அரசு வரன்முறைப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகாலமாக அரசுக்கு எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைத்தும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்துவதும், தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்வதும் “அரசின் கொள்கை முடிவு” எனவும் கூறி பால் வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் தட்டிக் கழித்த காரணத்தால் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் அவரவர் விரும்பும் போதெல்லாம் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்துவதும், பாலுக்கான கொள்முதல் விலையை குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை ரீதியாக முடிவெடுத்து அவசர சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பால் உற்பத்தியை அதிகப்படுத்த அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு ஆவின் பால் விற்பனையை அதிகப்படுத்தவோ, பால் முகவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி நலவாரியம், மருத்துவக் காப்பீடு, 15 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஆவின் பாலுக்கான விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி தமிழகம் முழுவதும் ஒரே சீராக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் 1 லிட்டர் ரூ.25 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை உடனடியாக நடைமுறைப்படுத்த தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என பொன்னுசாமி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை ரீதியாக முடிவெடுத்து அவசர சட்டம் இயற்ற வேண்டும்.’’
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments