கோவா வந்த பா.ஜக தலைவர் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஒருநாள் பயணமாக கோவா வந்துள்ளார். பா.ஜ.கவின் பிராந்திய மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுபாஷ் வெலிங்கர் தலைமையில் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கோவா வந்த அமித்ஷாவுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் திரண்டு வந்து கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுபாஷ் வெலிங்கர் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்-ன் பாரதீய பாஷா சுரக்ஷா சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பனாஜியில் உள்ள ஸ்டேடியம் அருகே பாஜவை கண்டித்தும், அமித்ஷாவை கண்டித்தும் அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோவா பள்ளிகளில் கொங்கணி மற்றும் மராத்தி மொழிகளை பயிற்று மொழியாக ஆக்க தவறிய மாநில, மத்திய பாஜ கூட்டணி ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வெலிங்கர் நிருபர்களிடம் கூறுகையில், மாநில பாஜ கூட்டணி அரசின் ஆங்கிலத்திற்கு ஆதரவான கொள்கைகளை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே தொடர்ந்து நாங்கள் பாஜ மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போராட்டம் நடத்துவோம் என்றார். பாஜ தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டிய விவகாரம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments