தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி இன்று (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. 28 ‘லீக்’ ஆட்டம், இரண்டு அரை இறுதி, இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 31 ஆட்டம் நடைபெறும்.
இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்), வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்), மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), லைகா கோவை கிங்ஸ் (கோவை), காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்டு ராபின் முறையில் மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
முதல் அரைஇறுதி செப்டம்பர் 16-ந்தேதி நெல்லையிலும், 2-வது அரை இறுதி 17-ந்தேதி சென்னையிலும் இறுதிப்போட்டி 18-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது.
கிட்டதட்ட ஐ.பி.எல். பாணியிலேயே இந்த தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வளரும் நட்சத்திரங்களுடன் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), பத்ரிநாத் (காரைக்குடி), முரளிவிஜய் (கோவை), தினேஷ் கார்த்திக், எல்.பாலாஜி (தூத்துக்குடி) உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், ஆர்.சதீஷ், தலைவன் சற்குணம், யோமகேஷ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) போன்ற ஐ.பி.எல்.லில் ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் அங்கம் வகிக்கிறார்கள்.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சேப்பாக்கம் சூப்பர் கில் லீஸ் அணியின் கேப்டன் திருச்சியைச் சேர்ந்த ஆல்- ரவுண்டர் ஆர்.சதீஷ் மிகவும் அனுபவசாலி. ஐ.பி.எல். மற்றும் ரஞ்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்திய முன்னாள் வீரரான ஹேமங் பதானி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார். அவரது வியூகங்கள் அணிக்கு பக்க பலமாக இருக்கும்.
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியிலும் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல்.லில் கலக்கியவர். எல்.பாலாஜி, அஸ்வின் கிறிஸ்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய சிறந்த வீரர்களுடன் அந்த அணி களம் காண உள்ளது.
இரு அணியும் சம பலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 5.45 மணிக்கு நடக்கிறது. சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம் பெறும்.
நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் எமிஜாக்சன், ஆன்ட்ரீயா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ஆடல், பாடல் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி 6.30 மணி வரை 45 நிமிட நேரம் நடைபெறும்.

No comments:
Write comments