மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 182 பந்துகளில் சதமடித்தார்.
மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக்வுட் 62, சாமுவேல்ஸ் 37 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுளையும், முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன்-கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.3 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் பிராவோவிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து ராகுலுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய ராகுல் 58 பந்துகளில் அரை சதம் கண்டார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 37 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 75, புஜாரா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ராகுல் அபாரம்: 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அசத்தலாக ஆடிய ராகுல், ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து 182 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 3-ஆவது சதமாகும். புஜாரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ராகுல் 158 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் வேகத்தில் விக்கெட் கீப்பர் டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி (44) சேஸ் சுழலில் சிக்கினார். அஷ்வின் (3) பிஷூ சுழலில் வீழ்ந்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்து, 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஹானே (42), சகா (17) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் 2 விக்கெட்களும், பிஷூ, கேப்ரியல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments