நீங்க முட்டை வீசிவிட்டால் நான் பயந்து மன்னிப்பு கேட்டுவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? ஒரு காலும் அப்படி நடக்காது. நான் சொன்னதை வாபஸ் பெறமாட்டேன். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடு ஒரு நரகத்தை போன்றது, அங்கு செல்வதும் நரகத்திற்கு செல்வதும் ஒன்றுதான் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை ரம்யா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது " நானும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் சென்று இருக்கிறேன். அதனை நரகத்தோடு ஒப்பிடுவது என்பது சரியான நிலைபாடு இல்லை. அங்குள்ள மக்களும் நம்மை போன்றவர்கள்தான். அவர்களும் நம்ம மதிக்கத்தான் செய்கிறார்கள்" என தெரிவித்திருந்தார்.
ரம்யாவின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக பா.ஜ.க, பஜ்ரங்தள், வி.ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகள் ரம்யாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரம்யா மங்களூர் சென்றிருந்த போது அவரது கார் மீது முட்டை வீசி பஜ்ரங்தள் அமைப்பினர் அமலியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் ரம்யா கூறியதாவது "என் மீது முட்டை வீசியவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முட்டை வீசுவதால் பயந்து மன்னிப்பு கேட்கமாட்டேன். நான் சொல்வதை மீண்டும் சொல்கிறேன், பாகிஸ்தானை நரகத்தோடு ஒப்பிடுவது என்பது தவறான பேச்சு. அங்குள்ள மக்களும் நம்மை போன்றவர்களே!. இதனை நான் சொன்ன பிறகு வலது சாரிகளான பா.ஜ.க மற்றும் அதன் அமைப்புகள் மட்டுமே என் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் தேச துரோகம் என்றால் என்ன என்பதை வரைவிலக்கணம் ஏற்படுத்த வேண்டும். தங்களுடைய கொள்கைகளுக்கு எதிராக யார் பேசினால் அவர்களை தேச துரோகிகளாக பா.ஜ.கவினர் சித்தரித்து வருகின்றனர்" என ரம்யா தெரிவித்தார்.
ரம்யாவின் இந்த கூற்றுக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் இருந்துவருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ரம்யாவை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தான் நரகம் இல்லை என்றால் ரம்யா தாராளமாக அங்கு செல்லட்டும், இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை என தெரிவிக்கின்றனர். ரம்யாவை ஆதரித்து பேசுகிறவர்கள், பாகிஸ்தான் நரகம் என்றால் ஏன் பா.ஜ.க தலைவர்கள் அங்கு சென்று அதன் தலைவர்களோடு கை குலுக்குவதும், விருந்து உண்ணவும் செய்கிறார்கள்? " என கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:
Write comments