Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கே கடும் சிக்கல்..!


ராம்குமாரின் உடலை பிரேதப்பரிசோதனை செய்யும் குழுவில் தனியார் மருத்துவர் ஒருவரை சேர்ப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால் வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பு வரும்வரை பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ஆம் தேதி புழல் சிறையில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அவரது உடல் பிரேதப்பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

‘எனது மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தங்களது தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி ராம்குமாரின் தந்தை ஆர்.பரமசிவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த தனி நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ராம்குமாரின் உடலை 4 அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். ராம்குமாரின் ரத்த சம்பந்த உறவினர்கள் யாரும் வராததால் நேற்று முன்தினம் பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, விஜேந்திரன் ஆகியோர் நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்திய நாதன் ஆகியோரைக் கொண்ட இரண்டாவது அமர்வில் ஆஜராகி, ‘‘ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனையில் தங்களது சார்பில் ஒரு மருத்துவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று முறையிட்டனர். விசாரணையை மதியத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என உத்தரவிட்டனர்.

அதே அமர்வில் நேற்று மதியம் விசாரணை நடந்தது. வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆஜராகி, ‘‘சுவாதி கொலையின் உண்மைகளை மறைப்பதற்காக ராம்குமாரை போலீஸார் திட்டமிட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடுகின்றனர். அரசு மருத்துவர்கள் ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்தால் உண்மையான காரணம் வெளியே வராது. அரசு மருத்துவர்கள் போலீஸாருக்குத்தான் சாதகமாக இருப்பர். எனவே, இந்த மருத்துவக் குழுவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் தடய அறிவியல் துறை நிபுணரான மருத்துவர் பி.சம்பத்குமாரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிஷங்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ‘‘இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களிலும் அரசு ஒரே ஒரு மருத்துவரை நியமித்துதான் பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளது. ஆனால், இந்த வழக்கில் அரசே முன்வந்து 4 அரசு மருத்துவர்களை பிரேதப் பரிசோதனை செய்ய நியமித்துள்ளது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் அரசு மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லாததுபோல ஆகி விடும். இதுவரை என்கவுன்ட்டர், மறுபிரேத பரிசோதனை போன்ற அசாதாரண வழக்குகளில் மட்டுமே தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சிறைக்குள் நடந்த தற்கொலை. இதற்கு தனியார் மருத்துவர்களை அனுமதிக்க முடியாது’’ என அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஜ், ‘‘அப்படியானால் இது அசாதாரணமான மரணம் இல்லையா? பிரேதப் பரிசோதனைக் குழுவில் மனுதாரர் தரப்பு கோரும் தனியார் மருத்துவரை அனுமதித்தால்தான் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை ஏற்படும்’’ என்றார். அதற்கு சக நீதிபதியான எஸ்.வைத்தியநாதன், ‘‘மனுதாரர் தரப்பு தாங்கள் பரிந்துரைக்கும் தனியார் மருத்துவர் பி.சம்பத்குமாருக்கு பதிலாக, அரசு மருத்துவர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

ஆனால், வழக்கறிஞர் ஆர்.சங்கர சுப்பு, ‘‘இந்த வழக்கில் எங்களுக்கு அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதால்தானே தனியார் மருத்துவரை சேர்க்க கோருகிறோம்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு விடுத்த கோரிக்கையை அரசுத் தரப்பு கடுமையாக எதிர்த்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு தரப்பில் நம்பிக்கை இல்லாதபோது மனுதாரர் கோரும் தனியார் மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வழிவகை உள்ளது. இது சிறைக்குள் நடந்த மரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

ஆனால், இதில் அரசுத் தரப்பு வாதப்படி தனியார் மருத்துவருக்கு பதிலாக அரசு மருத்துவரை 5-வது நபராக சேர்க்கலாம் என சக நீதி பதியான எஸ்.வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் எங்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லாததால், நீதிமன்ற பதிவுத்துறை இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் உத்தரவுக்காக தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிட வேண்டும். அதுவரை பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது.

இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic