தமிழகத்தில் பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு 1.05 மணியளவில் தூங்கிகொண்டிருந்த மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்துள்ளனர். இதனால் பீதியடைந்த பெரம்பலூர், துறைமங்கலம், கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, கவுள்பாளையம், பேரளி, நன்னை, லப்பைக்குடிகாடு, திருப்பெயர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பயத்துடன் தெருக்களில் திரண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியிலும் நில அதிர்வை உணர்ந்த மக்கள் நள்ளிரவில் வீதியில் கூடிவிட்டனர். மேலும், கடலூர் மாவட்டம் ராமநத்தம், திட்டக்குடி,வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். வீதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூடியிருந்த மக்கள், நில அதிர்வை தாங்கள் உணர்ந்தது குறித்து ஒருவருக்கொருவர் அச்சத்துடன் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக ஆய்வு மையத்தில் பதிவாகவில்லை என புவியியல் துறை ஆய்வு மைய இயக்குநர் மீனாட்சிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கம் தொடர்பான எந்தவொரு தகவலும் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் கடந்த 2012ஆம் ஆண்டு, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவிலும் பின்னர் 4 மணி அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சமடைந்ததை மறக்க முடியாது.
No comments:
Write comments