கொடைக்கானல், பிரையண்ட் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதிகளான வடகவுஞ்சி, ஐந்து வீடு, பிரகாசபுரம் சாலை, சகாயபுரம், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. தற்போது, இந்தப் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கவில்லை. ஆனால் பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சித் தோட்டத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். அதிலும் நீல வண்ணத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. இதுகுறித்து கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன்ராம், "கொடைக்கானல் மலையில் கடந்த 2006ஆம் ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூத்தன. இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்ட குறிஞ்சித் தோட்டத்தில் தற்போது, குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிஞ்சி மலர்களில் 20 வகைகள் உள்ளன. அவற்றில் சிலவகை மலர்கள் இங்கு பூத்துள்ளன" என்று தெரிவித்திருக்கிறார். இந்த அரிதான மலரைக் காண விரும்புபவர்கள், கொடைக்கானல் நோக்கிப் புறப்படலாம். புகைப்படக் கலைஞர்களின் கவனத்தையும் குறிஞ்சி மலர்கள் வெகுவாக கவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Write comments