உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, "பார்லிமென்டெரியன்' என்ற இதழ் சார்பில் தேர்தல் கருத்துக்கணிப்பு அங்கு அண்மையில் நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில், அந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் (203 தொகுதிகள்) கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி கடந்த 2012-ஆம் தேர்தலில் 224 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மைமிக்க கட்சியாக உருவெடுத்தது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு 74 இடங்களே கிடைக்கும்.
அதேசமயத்தில், அதிக இடங்களில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறும். அக்கட்சி 169 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும்.
பாஜகவுக்கு 135 இடங்களும், காங்கிரஸýக்கு 13 இடங்களும் கிடைக்கும். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளது என்று அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மாயாவதி என்று 29 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அகிலேஷ் யாதவுக்கு 25 சதவீதம் பேரும், பாஜகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புடைய வருண் காந்திக்கு 23 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
No comments:
Write comments