சென்னையில் கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து மறுபடியும் மூன்று சிறுமிகள் தப்பியோடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரசைவாக்கம் அருகே கெல்லீஸ் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பதினெட்டு வயதுக்கும் குறைவான குற்றம் செய்த சிறுவர்-சிறுமிகள் காவலில் வைக்கபட்டுள்ளனர். தற்போது பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 50 சிறுவர்களும், மூன்று சிறுமிகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை மூன்று சிறுமிகள் சுவரை தாண்டிக் குதித்து ஓட்டேரி சுடுகாடு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். அரசு கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் செல்வராஜ் தற்செயலாக எண்ணிக்கை நடத்தியபோதுதான் அவர்கள் தப்பி சென்றது தெரியவந்தது. இவர்கள் மூவருமே திருட்டு வழக்கில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தலைமைச்செயலகப் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது போலீஸார் மூன்று சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு ஜூலை மாதத்தில் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் கண்காணிப்பாளருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த மோதலை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொண்ட 33 சிறுவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அதில் முப்பது சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும், மற்ற மூன்று சிறுவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் கூறினர். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எட்டு சிறுவர்கள் இந்த இல்லத்திலிருந்து தப்பி ஒடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அங்கு போதிய கண்காணிப்பு இல்லாமல் இருப்பதுதான் என முன்பு சிறுவர்கள் தப்பியோடியபோது காவல்துறை தரப்பிலிருந்தே சொல்லப்பட்டது. மீண்டும் மீண்டும் அவர்கள் தப்பியோடியும் பாதுகாப்பை பலப்படுத்தாதது யார் தவறு?

No comments:
Write comments