மாறன் சகோதரர்கள் வழக்கில் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது சி.பி.ஐ. நீதிமன்றம். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் என நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சவுத் ஏஷியா எஃப்.எம். லிமிடெட் மற்றும் சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளுக்கான டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று தயாநிதி உள்ளிட்டோர் தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது வேறு; ஏர்செல்-மேக்சிஸ் என்ற இரு நிறுவனங்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றம் வேறு என்பது மாறன் சகோதரர்கள் வாதம். இம்மனு மீதும் நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தி வந்தார். நேற்றைய விசாரணையின்போது, டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்ற மாறன் சகோதரர்களின் மனுவை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்தார். மேலும், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments