மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியிடையே முறிவு ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக இந்த கூட்டணிகளுக்கிடையே முறிவு ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சி நிர்வாகி பீமன் போசே, ‘காங்கிரஸ் உடன் கூட்டணி பற்றி நாங்கள் ஏதும் விவாதிக்கவில்லை. தேர்தலை தனித்து நின்று சந்திக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டோம்’ என்று கூறினார். அதேவேளையில், காங்கிரஸ் உடனான கூட்டணி நீடிக்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில பிரிவு விரும்பியதாகவும், அதற்கு கட்சி மேலிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கட்சியின் மூத்தத் தலைவர் பெனிகல் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அதிர் செளத்ரி கூறுகையில், ‘கூட்டணி முறிவு பற்றி எங்களுக்கு தெரியப்படுத்துவதில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவலைப்படவில்லை. கூட்டணிக்காக நாங்கள் ஏன் அவர்களிடம் சென்று கை ஏந்த வேண்டும்? காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கட்சிகள் தேர்தலை தனியாக சந்தித்தால், அது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உதவியாக இருக்கும்’ என்றார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments