காஷ்மீர் எல்லையில் பதற்றம் அதிரிகரித்துள்ளது. ஜம்மு, கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது என்று எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுத மற்றும் மோட்டார் ‘ஷெல்’ தாக்குதலை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து நடத்தியது. ‘ஆர்.எஸ்.புரா செக்டரில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச்சூடு தாக்குதலானது, அதிகாலை மூன்று மணி வரையில் நடைபெற்றது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறிய ரக ஆயுத மற்றும் மோட்டார் ‘ஷெல்’ தாக்குதலை நடத்தினர். இந்திய ராணுவமும் சரியான பதிலடியைக் கொடுத்தது’ என்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ஜம்மு பிராந்திய அதிகாரி தாமேந்திர பாரிக் கூறி உள்ளார். இதேபோன்று ஹீராநகர் மற்றும் சம்பா செக்டருக்கு இடைப்பட்ட பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரவு இரண்டு மணியளவில் துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியது, இது காலை ஆறு மணி வரையில் நீடித்து உள்ளது. இப்பகுதியிலும் பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது. நேற்று காலை 8:20 மணியளவிலே சர்வதேச எல்லையில் அனைத்து பகுதியிலும் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த வெள்ளியன்று பாகிஸ்தான் ராணுவம் கிராம மக்கள் மற்றும் இந்திய நிலைகளை குறி வைத்தபோது பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உரியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கு செயல்பட்டு வந்த ஏழு பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் இந்த தாக்குதலை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான் கடந்த ஒரு மாதமாக காஷ்மீர் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 60-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

No comments:
Write comments