"இந்திய அரசியல் அரங்கில் ஜாதி அல்லது மதம் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஜாதி, மத அடிப்படையில் வாக்குசேகரிப்பது தேர்தல் விதிகளின்படி முறைகேடாகுமா?'' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஹிந்துத்துவம் தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை, அந்த நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு கடந்த 1995ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், "ஹிந்துத்துவம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல்முறையாகும். அது ஒரு மதத்தை மட்டுமே குறிப்பிடுவது ஆகாது' என்று தீர்ப்பளித்தனர்.
இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.ஏ.போப்தே, ஏ.கே.கோயல், யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.
இந்த விவகாரம் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக, அந்தச் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு வேட்பாளர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்,
நாட்டில் ஜாதி, மத அடிப்படையிலான அரசியலுக்கு முடிவு கட்டுவதற்கு ஒட்டுமொத்த விவகாரத்தையும் மீண்டும் விசாரிக்க வேண்டும். இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வாக்குசேகரிக்கும் ஒரு வேட்பாளர் மீது முறைகேடு புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுவது எப்படிச் சரியாகும்? ஜாதி அடிப்படையில் வாக்குகள் பெறுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டார்.
நாள் முழுவதும் நடைபெற்ற விவாதத்தில், ஹிந்துத்துவம் என்றால் என்ன? என்பது தொடர்பான விரிவான விவாதத்துக்குள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று செவ்வாய்க்கிழமை கூறியதையே நீதிபதிகள்மீண்டும் வலியுறுத்தினர். வாதப் பிரதிவாதத்தின் முடிவில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. அதையடுத்து, வழக்கு விசாரணை வியாழக்கிழமை (அக். 27) ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Write comments