செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் வங்கியில் கொடுத்து மாற்றி வருகிறார்கள். பணம் மாற்றியவர்களே மீண்டும் மீண்டும் வங்கிக்கு வருவதால் புதியவர்கள் பணம் மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.
இதையடுத்து பணம் மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அழியாத மை வைக்கப்பட உள்ளது. இதற்காக வங்கிகளுக்கு தேவையான அளவு அழியாத மை சப்ளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அழியாத மையை 1962-ம் ஆண்டு முதல் மைசூரில் இயங்கி வரும் மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் தான் தயாரித்து தேர்தல் கமிஷனுக்கு வழங்கி வருகிறது.
கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம் இப்போது வங்கிகளுக்கு சப்ளை செய்வதற்காக அழியாத மையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவன மேலாளர் ஹாரகுமார் கூறியதாவது:-
வங்கியில் பணம் மாற்றுபவர்களின் கை விரலில் மை வைக்க வேண்டும். எனவே போதிய அளவு மை பாட்டில்களை கையிருப்பில் வைத்திருங்கள் என்று மத்திய அரசு எங்களுக்கு தெரிவித்தது. எவ்வளவு மை பாட்டில்கள் தேவை என்பது பற்றி எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எங்களிடம் போதிய அளவில் அழியாத மை பாட்டில்கள் கையிருப்பில் உள்ளது என அவர் கூறினார்.

No comments:
Write comments