கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், பிரதமர் மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்த போது 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதற்கான சான்றுகள் சோதனையின் போது சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக சாடி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடி மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதித்யா பிர்லா குழுமத்தில் நடத்தப்பட்ட வரிசோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி குற்றம் சுமத்துவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வரித்துறை நடத்திய சோதனையின்போது, அந்த குழுமத்தின் அப்போதைய தலைவரின் லேப்டாப் மற்றும் போன்களில் ஆய்வு செய்த போது, குஜராத் முதல் மந்திரிக்கு 25 கோடி வழங்க வேண்டும் எனவும் அதில் 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன்மூலம் அப்போதைய முதல் மந்திரி நரேந்திர மோடி 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது ஊர்ஜிதமாகியுள்ளது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை கெஜ்ரிவால் சட்டப்பேரவைக்கு வெளியே கூறவில்லை. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாரதீய ஜனதா, சட்டப்பேரவைக்குள் பேசினால் அவதூறு வழக்கு தொடர முடியாது என்பதை அறிந்து அவது குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிகிறது. பொய்களை கூறுவதற்காக சட்டப்பேரவையின் தனிச்சிறப்புரிமையை கெஜ்ரிவால் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையின் கீழ் உள்ளதால் இது குறித்து கருத்து கூற முடியாது என்று பிர்லா குழுமம் தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments