ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான்கு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர்களான விவேக் நாராயண் சர்மா, சங்கம் லால் பாண்டே ஆகியோரும், எஸ்.முத்துக்குமார், ஆதில் ஆல்வி என்ற தனிநபர்களும் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதனிடையே, மேற்கண்ட மனுக்கள் மீது தங்கள் தரப்பிடம் கருத்து கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது.
இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரான பொது நல மனுக்கள், தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசை எதிர்க்கும் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்கள் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ளாத வகையில் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் குறுக்கிட்டு, "அரசு நடவடிக்கையின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால் மக்களுக்கு இதனால் பெரிய அளவில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் (மத்திய அரசு) கருப்புப் பணத்துக்கு எதிராக அதிரடித் தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) நடத்தலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு எதிரான அத்தகைய தாக்குதலை நடத்தக் கூடாது' என்றார்.
அதற்கு, "சாமானிய மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்கிறேன். ஏனெனில், மத்திய அரசு எடுத்ததைப் போன்ற அதிரடித் தாக்குதலால் ஒரு வகையான பாதிப்பு ஏற்படவே செய்யும்' என்று முகுல் ரோத்தகி வாதிட்டார்.
அவரைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிடுகையில், அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். ஆதில் ஆல்வி என்ற மனுதாரர் சார்பாக மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல் வாதிட்டார். அவர் கூறியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்துக்குட்பட்டு மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகவில்லை. அதாவது, அச்சட்டத்தின் 26 (2) பிரிவின்படி, அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அரசால் ஒரே தடவையில் செல்லாது என்று அறிவிக்கும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது. ஆனால் தற்போது ஒரே தடவையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரசின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. மாறாக, இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களைப் போக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? என்பதற்கு அரசு பதில்களை அளிக்க வேண்டும் என்றே கோருகிறேன் என்று சிபல் வாதிட்டார்.
அப்போது, இந்த விவகாரத்தில் மக்களின் சிரமங்களைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரமாணப்பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேசமயம், மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் எதையும் அனுப்பவில்லை. இவ்விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Write comments