திருச்சி: நேற்று நவம்பர் 06 2016 ஞாயிற்றுக்கிழமை, திருச்சியில் எங்கும் மக்கள் வெள்ளம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக ஒன்று கூடிய தமிழக முஸ்லிம்கள்.
பெண் பேச்சாளர்கள் ஆயிஷா, ஜாஸ்மின், அஃப்சானா, மும்தாஜ் மற்றும் பர்ஸானா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூத்த தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாநிலத் தலைவர் பி.எம். அல்தாஃபி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பல லட்சம் பெண்கள் அணி திரண்ட கண்டன பொதுக்கூட்டத்தில் மும்தாஜ் அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
கண்டன பொதுக்கூட்டம் மாநாடு போல காட்சியளித்ததாகவும், முதல்முறையாக ஒரு கூட்டத்திற்கு "ஆண்களுக்கு தனிஇட வசதி செய்யப்பட்டுள்ளது" என்ற வாசகத்தை பார்ப்பதாகவும் திருச்சி மக்கள் தெரிவித்தனர். மேலும் இவ்வளவு பிரம்மாண்டமான பெண்கள் ஆர்ப்பாட்டம் நாங்கள் இதுவரை பார்த்ததில்லை எனவும், மிகவும் கட்டுப்பாடோடு இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும் அங்கு குழுமி இருந்த பெண்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதி மிக சிறப்பாக செய்திருப்பதாக தெரிவித்தார்.
இது பெண்கள் ஆர்ப்பாட்டம் எனினும் கணிசமான ஆண்களும் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல லட்சம் மக்கள் ஒன்றாக பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக திரண்டாலும் தள்ளாத வயதிலும் தன் சமூக நீதிக்காக வயதானவர்களும் கலந்துகொண்டது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் வாசிக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-
விபச்சார விடுதிகளை இழுத்து மூடி பெண்களைக் காக்க வேண்டும் என்றும், எங்கள் மதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் எங்களுக்கு போதுமானதாக உள்ளது என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கொடும் விபச்சாரத்தினால் வாழ்க்கையை இழந்து நிற்கும் சினிமா நடிகைகளை காக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாத்தில் உள்ள அற்புதச் சட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்கள் வேலையை எங்களுக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும் இதற்கு மேலும் எங்கள் விசயத்தில் தலையிட்டால் கடுமையான விளைவை முஸ்லிம் பெண்களிடம் இருந்து சந்திக்க வேண்டிவரும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு:
மத்திய பா.ஜ.க அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் பேரணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தெரிவித்தார். இதேபோல் தமிழ்நாடு ஐக்கிய ஜனதாதளமும் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments