500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து இன்றோடு 10ஆவது நாள். இந்த பத்து நாளும் இந்திய மக்கள்மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி திணிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்போ, முன்னேற்பாடுகளோ எதுவும் இல்லாத இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துவிட்டது.
நாடு முழுக்க ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இதுவரை 55 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த விபரீதமான நடவடிக்கை அப்பாவி பொதுமக்கள், சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகளின் வணிகத்தை முழுமையாக முடக்கியுள்ளது.
10 நாட்களாக ஒரு நாட்டில் பொருளாதாரம் முடங்கிக் கிடப்பது சாதாரண விஷயமல்ல. அது, போர்ப் பிராந்தியங்களில் நிலவும் பற்றாக்குறைக்கு ஒப்பானது என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இன்று உருவாகியுள்ள அவலநிலை தொடர்பாக நாடு முழுக்க உள்ள உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் நேற்று, இது தொடர்பாக வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், ‘‘இந்தப் பிரச்னை அவ்வளவு சாதாரணமல்ல; மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இது மிகுந்த பரிசீலனைக்கு உரியது. மக்கள் பணத்துக்காக அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரங்களும் உருவாகலாம்” என்ற எச்சரிக்கையோடு தீர்ப்பை தள்ளிவைத்தார்.
அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு சில மணி நேரங்களில் மத்திய அரசு இன்று, (19-11-2016) அன்று வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முடியாது, இன்று வங்கிகள் முதியவர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்திருக்கிறது. பெருமளவு முதியவர்கள் மரணமடைந்திருக்கும் நிலையில், இதோ, ஒரு நாள் வங்கி முதியவர்களுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கிறது மத்திய அரசு. வங்கிகளில் அல்லாடுகிறவர்களில் 99% பேர் நடுத்தர வயதினர்; முதியவர்கள் அல்ல. எண்ணிக்கையில் குறைவான முதியவர்கள் வங்கிகளுக்கு வரும்போது மரணடைவதற்கு மத்திய அரசின் முன்னேற்பாடு அற்ற நடவடிக்கைகளே காரணம். முதியவர்கள் விவகாரம் முன்னுக்கு வந்ததும். உடனே, முதியவர்களுக்காக ஒரு நாளாம். மற்றவர்கள் வங்கிகளுக்குச் செல்லக்கூடாதாம்!
ஒட்டுமொத்தமாக, மோடியின் இந்த அறிவிப்பு மக்களிடமிருக்கும் சேமிப்பை வங்கிகளுக்குத் திருப்பிவிடும் நடவடிக்கை என்பதை பலரும் சுட்டிக்காட்டிவிட்டநிலையில், மக்களை இப்படி விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தும் சர்வாதிகார மனநிலை எங்கிருந்து உற்பத்தியாகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும்போது, ஜனநாயகமும் நீதித்துறையும் தண்டிக்கும் என நம்பிக்கை இந்தியாவில் உருவாக்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களுக்கு, மக்கள் தொடர்பான ஒரு முடிவை எடுக்கும்போது மக்கள்நலன் பற்றிய பயமோ, அச்சமோ, பொறுப்புணர்வோ இருந்திருக்கும். அந்தவகையில், மோடியின் அரசியல் வரலாற்றில் நீதி தொலைந்துபோன ஒன்றாகவே இருக்கிறது. நீதி கிடைக்காத எத்தனையோ குடும்பங்கள் குஜராத் வீதிகளில் இன்னும் உறவுகளைத் தொலைத்து, மவுனமாக மனதுக்குள் அழுதபடி அலைகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்வகையில் தண்டிக்கப்படவில்லை. அது கொடுத்த உற்சாகத்தில்தான் இம்மாதிரி, மறைமுக பொருளாதார எமெர்ஜென்சிகளை அறிவிக்க முடிகிறது.
இந்திய மக்கள் தொகை சுமார் 121 கோடியே இரண்டு இலட்சம் மக்கள். இது 2015இல் உள்ள தரவுகளின்படி என்றால் இப்போது, இதைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் இருப்பர். ஆனால் இவர்களில் சிலகோடிப் பேர்தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். ஏடிஎம்-களும் வங்கிக் கிளைகளும்கூட மிக மிகக் குறைவு என்னும் நிலையில், அதிரடியாக செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை டிசம்பர் மாத இறுதிக்குள் எப்படி மாற்ற இயலும். அதுவும் இத்தனை கெடுபிடிகளுக்குள்.
பணம் செல்லாது என்று அறிவித்தபின்னர் முதலில், பழைய நோட்டுகளைக் கொடுத்து முதலில் நாளொன்றுக்கு நபர் ஒருவர் 2,000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர், அதை 4,500 ரூபாய் ஆக்கியது. இப்போது நேற்றிலிருந்து (17-11-2016)ஆம் தேதியில் இருந்து மீண்டும் 2000 ரூபாயே மாற்ற முடியும் என அறிவித்தது. இதில், பணம் மாற்ற வருகிறவர்களின் கைகளில் கறுப்பு மை வேறு வைத்துவிட நிதி அமைச்சகம் முடிவெடுத்தது. இதுபற்றிக் கேட்டபோது, பெருங்கூட்டமாக நிற்கும் மக்களைப் பார்த்து ‘இவர்களை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தவறாகப் பயன்படுத்துவதால் இந்தக் கறுப்பு மை’ என்றார்கள். வெள்ளையர் காலத்தில் குற்றப்பரம்பரைகளாக நடத்தப்பட்ட பல்வேறு சமூகங்கள்மீதான கண்காணிப்பை வெள்ளையறு கைரேகை பதிவுச் சட்டத்தின் மூலம் உறுதிசெய்ததுபோல, இப்போது பணம் மாற்ற கறுப்பு மை வைக்கிறது அரசு.
இந்த மை வைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டபோது, இந்திய அளவில் அதிர்ச்சி கலந்த அறிவிப்புகள் வெளியானது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத மோடி அரசு எதையும் தளர்த்தவோ, வசதிகளைப் பெருக்கவோ தயராக இல்லை. ஆனால் சட்டங்களை, விதிமுறைகளை மிக மிக கடுமையாக்கிக்கொண்டே போகிறார்கள். நாடெங்கிலும் முதியவர்கள் இறந்ததால் இன்று சனிக்கிழமை முதியவர்களைத்தவிர வேறு யாரும் பணம் மாற்ற முடியாதாம். அதாவது, வார இறுதி நாளில் வீட்டில் இருக்கிறவர்கள் வங்கிகளுக்குச் செல்லக்கூடாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
கைகளில் இருக்கும் பணத்தை மாற்ற மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப தடையாக இருப்பது சில்லறைத் தட்டுப்பாடு. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அரசு அறிவித்தபடி எவரும் வாங்காத நிலையில், புதிய ரூபாய் நோட்டான 2000 ரூபாயையும் எவரும் வாங்கவில்லை. காரணம், சில்லறை பற்றாக்குறையே. ஒரு இருண்ட மேகம் இந்திய மக்களைச் சூழ்ந்தது போலிருக்கிறது மக்களின் நிலை. இதுபற்றி யாரேனும் கேட்டால் ஒன்றில் பரிகாசமோ அல்லது கூடுதலாக ஒரு விதிமுறையோ வந்துசேரும் போலிருக்கிறது.
-டி.அருள் எழிலன்
கள்ளப்பணம் தொடர்பான சில உபயோகமான பதிவுகள்
#
கறுப்புப் பணம் ஒழிந்துவிடுமா? - ஜெ.ஜெயரஞ்சன்
#
கறுப்புப்பணம் எது உண்மை? - பிரபாத் பட்நாயக் பாகம்-1
#
கறுப்புப் பணம் எது உண்மை? - பிரபாத் பட்நாயக்! பாகம்-2

No comments:
Write comments