பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுகள் செல்லாது தொடர்பான அறிவிப்பால், வங்கிகளில் பணம் மாற்றுவதிலும் எடுப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன. எல்லா செலவுகளுக்கும் வங்கிகளின் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்று.
ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் பல தனியார் நிறுவன ஊழியர்களும் தினசரி செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் என்பது தவிர்க்க இயலாதது ஆகும். எனவே, ரொக்கப் பணம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
தங்களது ஊதியத்தை சம்பளமாகப் பெறுகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் ஊதியத்தை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தாலும், அவர்கள் தங்கள் தேவைக்கு பணத்தை எடுப்பதில் கட்டுப்பாடுகளோ மற்ற எவ்வித சிரமங்களோ இதற்கு முன்பு இல்லை. ஆனால், மோடியின் ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களின் அவதிகளும் ஏராளம்.
இப்படிப்பட்ட சூழலில், சம்பளத்தேதி நெருங்கி வரும் நிலையில் தங்களுக்கான ஊதியம் ரொக்கமாகக் கிடைக்க வேண்டும் என்பதே சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பும் விருப்பமுமாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக பொருளாளருமான ஸ்டாலின், “பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மக்கள் படும் அவதி அளவிடற்கரியதாக இருக்கிறது. எனவே, ரூபாய் நோட்டு தட்டுப்பாடு சரியாகும் வரை சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ரொக்கமாக ஊதியம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Write comments