டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிரம்ப். இவர் பற்றிய செய்திகள் பரபரப்பாக இந்தியா முழுவதும் பரவிவருகிறது. ஆனால், டிரம்ப் உலகம் முழுவதும் பேசப்பட்டு இணையத்தில் தேடப்படும் முக்கிய நபர்களின் பட்டியலில் டிரம்ப் முன்னணியில் உள்ளார்.
அவரது மேடைப்பேச்சில் செய்யும் முகபாவங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் எடுத்துப் போட்டு கிண்டல் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டொனால்ட் டிரம்ப் ஒரு ரஸ்லிங் போட்டியில் கலந்துகொண்டு மல்யுத்த வீரர்களிடையே கோமாளி மாதிரி ஓடி கட்டிப்பிடித்து உருளும் வீடியோவும் தற்போது வைரலாகி விட்டது. சில வருடங்களுக்கு முன்பு டிரம்ப் சுய விளம்பரத்துக்கு செய்த விளம்பரங்கள் அனைத்தும் அவருக்கு பாதகமாக மாறிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு எடுத்த அந்த ரஸ்லிங் வீடியோவில் தோற்ற வீரரின் தலையை இழுத்துப்பிடித்து ஷேவிங் மெஷின் உதவியுடன் முடியை மழித்து மொட்டையடிக்கிறார் டிரம்ப். இவரிடம் நாட்டை கொடுத்தால் எங்கள் அனைவரையும் மொட்டையடித்து விடுவார் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் அமெரிக்க இளைஞர்கள்.
டிரம்ப் ஒரு விளம்பர பிரியர். தனக்கு விளம்பரம் கிடைக்க, தான் தினமும் மீடியாக்களில் வலம் வர என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் அவரை எதிர்ப்பவர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். இப்படி அவர் தனக்கு செய்த விளம்பரங்களும், எதிர்ப்புகளும் அவரை உலகம் முழுக்க விரைவிலேயே பிரபலம் ஆக்கியது. இப்போது அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ இதழ் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த மனிதராக டொனால்ட் டிரம்பை தேர்வு செய்துள்ளது. டிசம்பர் மாதம் வெளியாகும் இதழில் ‘பர்சன் ஆப் தி இயர்’ என்ற தலைப்பில் வாசகர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு அதில் முதலாவது இடத்துக்கு வரும் நபர் டைம் இதழின் அட்டையில் இடம் பெறுவார். போன வருடம் இந்த பெருமை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்புகள் பெருகி வந்தாலும், இன்னொரு புறம் அவரின் ஆதரவாளர்களின் அட்டகாசமும் தாங்க முடியவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் அடுத்த மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி அரசு செலவில் நடப்பதில்லை. அதற்கு பதிலாக தனிநபர் அல்லது அறக்கட்டளை மூலம் பெறப்படும் நன்கொடையில் பதவியேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக பதவியேற்பு விழா முடிந்ததும் அதிபர் டிரம்ப் உடன் உணவு அருந்த ரூபாய் 7 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் உடன் உணவு அருந்த ஏழு தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். ஒபாமா இரண்டாவது முறையாக பதவியேற்ற போது ரூபாய் 310 கோடி வசூலானது. அதனை முறியடிக்க இன்னும் சில தொழிலதிபர்களை டிரம்புடன் உணவருந்த வைப்பதன் மூலம் இந்த வசூலை பல மடங்கு எகிற செய்ய, டிரம்பின் ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்களாம். இயல்பிலேயே கோடீஸ்வரரான டிரம்ப், இப்படி தொழிலபதிர்களிடம் வசூல் செய்ய வேண்டுமா? என ஒரு சாரார் அதிருப்தியில் உள்ளனர்.
டிரம்ப் ஒரு நடிகரும் கூட. அவர் நிறுவனங்கள் தயாரித்த பொருட்களின் விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர். ஒரு கட்டத்தில் ஹாலிவுட் பட உலகிலும் நுழைந்தார். செல்வந்தரான டிரம்ப் சினிமாவில் நடிப்பதற்கான ஆசையில் பல படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்துள்ளாராம். ஆனால், அவரது சொந்த பெயரான டிரம்ப் பெயரில் தான் கதாபாத்திரம் வழங்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக கேட்டு வாங்குவாராம். இத்தகைய விளம்பரப் பிரியர் எப்படி அமெரிக்கா மாதிரியான வல்லரசு நாட்டை எப்படி பொறுப்பாக ஆள்வார்? எனவும் அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் முகத்தில் இருபது விதமான முக பாவங்களை காட்டி வருகிறார். அவரது மேடைப்பேச்சில் செய்யும் முக பாவங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் எடுத்துப் போட்டு கிண்டல் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அவரை கிண்டல் செய்யும் அதே நேரம் அவரது ரசிகர்களும் பெருகி உள்ளனர். அவரை போன்றே கோணல் சேஷ்டைகள் செய்து வீடியோ வெளியிடுவதும், அவரை போன்று முடி அலங்காரம் செய்துகொள்வதும் பெருகி வருகிறது. ஜப்பானில் முகமூடி தயாரிக்கும் நிறுவனம் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. டிரம்ப் முகமூடிகளை செய்து விற்பனையை தொடங்கியுள்ளது. இதற்கு ஆர்டர்களும் குவிந்து வருகிறது. ஜப்பானில் உள்ள சைத்தமா நகரில் Ogawa Studio என்ற ரப்பர் முகமூடிகள் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிட்டபோதே டிரம்ப்பை போன்ற ரப்பர் முகமூடிகள் செய்ய ஆர்டர்கள் வந்துள்ளது. இப்போது டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முகமூடிகள் செய்ய ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த ஆலையின் உரிமையாளர் தெரிவிக்கிறார். தேர்தலுக்கு முன் ஒரு நாளைக்கு 45 முகமூடிகள் மட்டுமே தயாரித்தவர்கள், தற்போது தினமும் 500 முகமூடிகள் தயாரிக்கின்றனர். டொனால்ட் டிரம்பின் சிகை அலங்காரத்தை விரும்பும் பலரும் இந்த முகமூடிகளை குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச்செல்வதாக ஆலையின் உரிமையாளர் கூறுகிறார். டிரம்ப் பெயரில் இன்னும் என்ன பொருட்கள் எல்லாம் வரப்போகிறதோ தெரியவில்லை. உலகம் முழுவதும் டிரம்ப் எத்தகைய டிரெண்டிங்கில் உள்ளார் என்பதற்கு இந்த விஷயம் ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமேயாகும்.
டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்ததில் இருந்தே பல மாற்றங்கள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் தந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்டியானாவில் உள்ள கேரியர் நிறுவனத்தில் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடியபோது உணர்ச்சி பொங்க பேசினார் டிரம்ப். கேரியர் நிறுவனம் வெளிநாட்டுக்கு வழங்கி வந்த சுமார் ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதை பாராட்டிய அவர், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க நாட்டு தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விஷயத்தை முன்மாதிரியாகக் கொண்டு பிற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு சலுகைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள் பொருள்களை இறக்குமதி செய்ய வரிவிதிப்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தேர்தலில் தான் வெற்றி பெற உதவியாக இருந்த இன்டியானா வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனால் இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் இன்னும் அதிபர் நாற்காலியில் உட்காரவில்லை. அதற்குள் அவரின் அட்டகாசங்கள் அமெரிக்காவை அதிர வைத்துள்ளது என்று பலரும் புலம்பி வருகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் நியூயார்க் மாநிலத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரில் உள்ள சொகுசு மாளிகையில் வாழ்ந்து வருகிறார். அதிபர் தேர்தலில் இவர் வென்றதில் இருந்து நியூயார்க் நகர போலீஸார் மற்றும் அமெரிக்காவின் உளவுப்படை அதிகாரிகள் அவரது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். டொனால்ட் டிரம்ப்பின் மாளிகைக்கு செல்லும் பாதைகளை சுற்றிலும் சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான ஆயுதமேந்திய போலீஸார் இந்த சாலைகளை இரவும், பகலும் கண்காணித்து வருகின்றன. இவர்களுக்கான சம்பளம் மற்றும் இதரப் படிகள் என நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் டாலர்கள் செலவாகிறதாம். இந்த தொகையை எல்லாம் நியூயார்க் நகராட்சி நிர்வாகம் ஏற்று வருகிறது.
வரும் ஜனவரி மாதம் நாட்டின் அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், அடுத்த நான்காண்டுகளுக்கு இந்த பதவியில் இருக்கும்வரை அவரது குடும்பத்தார் வசிக்கும் மாளிகைக்கு பாதுகாப்பு வழங்க சுமார் 100 கோடி டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப்பின் பாதுகாப்புக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட நியூயார்க் நகராட்சி நிர்வாகத்தால் இயலாது என்பதால், அவரது பாதுகாப்பு செலவினங்களுக்காக அமெரிக்காவின் மத்திய அரசு நிர்வாகத்தில் இருந்து நிதி அளிக்கப்பட வேண்டும் என நியூயார்க் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆன்லைன் மூலம் ஆதரவு திரட்டும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று வெள்ளை மாளிகையில் தங்கி வாழ்ந்தாலும், எனது 10 வயது மகனின் பள்ளிப் படிப்பு முடியும்வரை அவனும் என்னுடைய மனைவியும் நியூயார்க் நகரில்தான் வசிப்பார்கள்’ என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இத்தனை சாதக பாதகங்களை கொண்ட டிரம்பை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ இதழ், 2016ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவருமான டொனால்ட் டிரம்பை தேர்வு செய்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் உலக அளவில் அதிகமாக பத்திரிகைகளில் இடம்பெற்றது மற்றும் அனைத்து உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு டைம் இதழ் சிறந்த மனிதரை தேர்வு செய்கிறது. 2016ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்படுவதற்கு டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி ரஷ்ய அதிகர் விளாடிமிர் புடின் மற்றும் இங்கிலாந்து குடியரசுக் கட்சியின் தலைவர் நிகில் ஃப்ராகே ஆகியோருக்கும் அதிக வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அவர்களை புறந்தள்ளி விட்டு முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார் டிரம்ப். ஏற்கனவே 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற ரீதியில் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கும் டிரம்புக்கு டைம் இதழின் அட்டைப்பட கட்டுரையும், உலகின் சிறந்த மனிதர் பட்டமும் பல மடங்கு உற்சாகம் அடையச் செய்யும். இன்னும் என்னவெல்லாம் கோமாளித்தனங்கள் செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு ஊடகங்களுக்கு பெருந்தீனி போடும் வல்லமை டிரம்புக்கு உண்டு. இன்னும் பலமுறை வரப்போகும் வருடங்களில் பத்திரிகைகளின் அட்டைகளில் இடம்பிடிக்க ஏதாவது அதிரடிகளை செய்து கொண்டுதான் இருப்பார் டிரம்ப். அமெரிக்க ஊடகங்களுக்கு இந்த மாதிரி ஒருவர் தேவை என்பதை தான் ‘டைம்’ இதழின் தேர்வு மறுபடியும் உறுதிபடுத்தியிருக்கிறது.
- விஜய் மகேந்திரன்

No comments:
Write comments