Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 9, 2016

போயஸ் கார்டன் உள்ளே… லைவ் ரிப்போர்ட்!


மைசூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை என்ற ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி தம்பதியினருக்கு மகளாக 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரின் இரண்டாவது வயதில் தந்தை ஜெயராம் காலமானவுடன் தாய் வேதவல்லியுடன் பெங்களூருவில் உள்ள அவரது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார்.
பெங்களூரில் பிஷப் காட்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். திரைப்பட வாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தாயார் வேதவல்லி சென்னை வந்து அவரது சகோதரியுடன் தங்கினார். திரைப்படத்துக்காக வேதவல்லி என்ற பெயரை ‘சந்தியா’ என்று மாற்றிக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு போயஸ் கார்டனில் குடியமர்ந்தார். அப்போதுதான், பெங்களூருவில் இருந்த ஜெயலலிதா தனது தாய் சந்தியாவிடமே சென்னைக்கு வந்தார்.
1958ஆம் ஆண்டு முதல் 1964 வரை சென்னையில் சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வெண்ட்டில் மெட்ரிக் படிப்பை முடித்தார். மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அதன் பிறகு, கல்லூரிப் படிப்பை தொடரவிருந்த நேரத்தில், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தவுடன் நடிப்பா, படிப்பா என்ற சூழலில் நடிப்பைத் தேர்ந்தெடுத்து கலை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
ஜெயலலிதா அவரது பள்ளி நாட்கள் முதல் வாழ்நாள் முழுவதுமே அவர் தடம் பதித்த எல்லாவற்றிலும் சாதித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பதித்தவர். படிப்பு, நடிப்பு, அரசியல் என அவரது வாழ்க்கை பயணம் படிப்படியாக வெற்றிகளைக் கடந்தே பயணப்பட்டது.
பள்ளிப்பருவம் தொட்டு ஜெயலலிதாவோடு பழகிய தோழியர், ஆசிரியைகள் உள்ளிட்ட அனைவருமே அவரது புத்திசாலித்தனத்தையும் ஆளுமைத்திறனையும் வியந்து பாராட்டி நினைவுகூர்வர்.
படிப்பிலும் நடிப்பிலும் எப்படி தனித்துவத்தோடு தனது வெற்றியை நிலைநாட்டினாரோ அப்படியே அரசியலிலும் தனிப்பெரும் ஆளுமையாக உயர்ந்து வலம் வந்தார். 1981இல் அதிமுக-வில் இணைந்து கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கியவர், படிப்படியாக பல சோதனைகளையும் கடந்து, அதிமுக-வின் பொதுச் செயலாளராகி, 1991இல் முதன்முதலாக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்து ஆறு முறை தமிழகத்தின் முதல்வராகத் திகழ்ந்தார்.
போயஸ் கார்டனின் வேதா நிலையத்தில் துறுதுறுவென்ற சின்னஞ்சிறு வயது முதல் கலையுலகம், அரசியல் உலகம் என அவரின் வாழ்நாட்கள் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தே பயணப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைகளைக் கடந்து 75 நாட்களுக்குப் பிறகு தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. போயஸ் கார்டனில் இருந்து செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்ற ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி இரவு உயிரற்ற நிலையில் திரும்பிய சோகம் கலக்கத்தில் ஆழ்த்தியது. மறுநாள் 6ஆம் தேதி மாலை எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் வாழ்வு தொடங்கிய சில வருடங்களில் இருந்து அவரது உடன்பிறவா சகோதரியாக அவரை ஒரு குழந்தையைப் போல் இறுதி வரை அருகிருந்து கவனித்து வந்தவர் சசிகலாதான். இறுதி வரை அத்தனை அக்கறையோடு ஜெயலலிதாவைப் பார்த்துப் பார்த்து அரவணைத்து வந்த தோழியான சசிகலா, ஜெயலலிதாவின் நல்லடக்கத்தை முடித்துவிட்டு, கனத்த இதயத்தோடும் கண்களைக் கவ்விய சோகத்தோடும் அவர் அன்போடு ‘அக்கா’ என்று அழைத்த ஜெயலலிதா இல்லாத போயஸ் கார்டனுக்குள் ஒருவித வெறுமை சூழ்ந்ததை உணர்ந்தபடியே உள்ளே நுழைந்தார்.
கார்டனுக்குள் வந்ததும் குளித்து முடித்து, ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு ஓவென்று அழுதுவிட்டு, ஜெயலலிதாவின் படத்தையே பார்த்தபடி யாருடனும் பேசாமல் அப்படியே அமர்ந்துவிட்டார். நேரம் செல்லச்செல்ல அப்படியே அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் திவாகரன், சசிகலாவின் அருகில் வந்து ஆறுதல் சொல்லி, ‘ரொம்ப நேரமா ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கீங்களே, கொஞ்சம் மாத்தி உட்காருங்க’ என்று சொன்னார்.
அதோடு இளவரசி, பிரியா, விவேக் உட்பட ஒன்பது பேரும் சசிகலாவுடனேயே அமர்ந்திருந்திருந்தனர். பிறகு அனைவருமே சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லி, ‘ரொம்ப நேரமா இப்படியே உட்கார்ந்திருக்கீங்களே… போய் படுத்து தூங்கி ஓய்வெடுங்க’ என்று சொல்ல, அதன்பிறகு அங்கிருந்து படுக்கையறைக்குச் சென்றார் சசிகலா. ஆனாலும் அவருக்கு, ‘அக்கா… அக்கா’ என்று பாசத்தோடு அழைத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா அருகில் இல்லாத சோகத்தால் அவருக்கு தூக்கமே வரவில்லை. அதனால் படுக்கை அறையிலும் தூங்காமலேயே நெடுநேரம் அமர்ந்தே இருந்தார்.
7ஆம் தேதி போயஸ் கார்டனுக்கு அமைச்சர்கள், அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்தனர். அமைதியாக அமர்ந்திருந்த சசிகலாவுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், வீரமணி ஆகியோர் சசிகலாவின் அருகில் சென்று, ‘அம்மா நீங்களே இப்படி இருந்தா எப்படிம்மா? அம்மா இடத்துல நீங்க இருந்துதான் எல்லோரையும் வழி நடத்தணும்’னு மெதுவாக இரண்டு வார்த்தைகள் பேசினர்.
அதுவரை குனிந்தே உட்கார்ந்திருந்த சசிகலா உடனே திடீரென நிமிர்ந்து, ‘கட்சியைப் பாதுகாத்தா போதும். தலைவர் எப்படி கட்சியைப் பாதுகாத்தார்? அதற்கடுத்து அம்மா எத்தனையோ சோதனைகளைக் கடந்து கட்சியை எப்படி எல்லாம் காப்பாற்றினாங்க? அதை எல்லாம் நெனச்சு பாருங்க’ என்று கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினார். அதோடு எல்லோரும் அமைதியாக இருந்துவிட்டார்கள்.
அதன் பிறகு நேற்று (8/12/2016) மீண்டும் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவைச் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் சசிகலா மறுபடியும், “கட்சியைப் பாதுகாத்துக்கங்க. கவனமா இருங்க. ஒற்றுமையா இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று கூறினார். அப்போது ஒரு அமைச்சர் “செங்கோட்டையன்தான் அமைச்சர் பதவி கேக்குறாரும்மா? தன்னை விட ஜூனியர்களே பதவியில் இருக்கும்போது சீனியர் நான் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதுங்கிற மாதிரி ஃபீல் பண்றாரு” என்று சொல்ல… நிமிர்ந்து பார்த்த சசிகலா, “அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் இப்போ ஒத்துமையா இருங்க… எல்லாம் சரி பண்ணிடலாம்” என்றபடி அமைதியாகி விட்டார். அதன்பிறகு அமைச்சர்களும் நிர்வாகிகளும் அமைதியாக கொஞ்ச நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பினர்.
அமைச்சர்களும் கட்சியினரும் சென்ற பின்னர், போயஸ் கார்டனில் மீண்டும் சசிகலா, ஜெயலலிதாவின் படத்துக்கு பக்கத்திலேயே அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த நேரம், திவாகரன் சசிகலாவிடம், ‘’அம்மா மறைந்தது தொடர்பாக உங்களைப்பத்தி வெளியில சந்தேகித்து பேசிக்கிறாங்க. மருத்துவமனையில சேர்த்த உடனே ஒரு போட்டோவாவது வெளியிட்டு இருக்கலாம்” என்றார்.
உடனே சசிகலா, “ஏன்… உனக்கு தெரியாதா? அக்காவைப் பற்றியே எல்லோரும் எவ்வளவோ பேசினாங்க… அதைவிடவா? அக்கா எப்பவுமே மேக்கப்போட இருக்கறதான் விரும்புவாங்க. அதனால ஆஸ்பத்திரில இருந்து போட்டோ எடுக்குறத அக்காவே விரும்பல. அவங்க எப்பவுமே ஃப்ரஷ்ஷா இருக்கிறததான் விரும்புவாங்க. அதனால எப்பவும் மேக்கப்போட இருக்கறதுல கவனமா இருப்பாங்க” என்றார்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, ஜெயலலிதா தன்னிடம் பகிர்ந்து கொண்ட பழைய நினைவுகளையும் ஜெயலலிதா எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார் என்பது பற்றியெல்லாம் மெதுமெதுவாக சோகத்துடனே பேசியபோது, “அக்கா மேக்கப் போட்டுக்கறதுல எந்த அளவுக்கு கவனமா இருந்தாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். பெங்களூரு சிறையில் இருந்தபோதுகூட மேக்கப் உமன்களை சென்னையில் இருந்து வரவழைத்து மேக்கப் போட்டுக்கொண்டு எப்போதும் ஒரு பூத்த மலரைப் போலவே ஃப்ரஷ்ஷாக இருந்தார். அண்மைக் காலமாக உடல்நலன் சரியில்லாத போதும், அவர் கலந்து கொண்ட விழாக்களில் உடல் உபாதைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எப்போதும் புன்னகைத்தபடியே எல்லோரையும் பார்த்து இரட்டை விரலைக் காட்டியபடி கையசைப்பார்.
ஒருமுறை அவர், கருணாநிதி வீல் சேரில் வந்து போவதையும், விஜயகாந்தைப் பற்றியும் குறிப்பிட்டு, ‘சசி… எனக்கு அப்படியெல்லாம் ஒரு நிலைமை வரக்கூடாது. அப்படியெல்லாம் வர்ற மாதிரி என்னை விட்டுடாதே சசி. எனக்கு உடம்பு முடியலைன்னா, மக்கள் பார்க்கறதுக்கோ, மற்றவங்க என்னை கேலியாக பேசும்படியோ என்னை வச்சிடாதே சசி. அந்த நேரத்தில் நான் வீட்டிலிருந்து எங்கும் வெளியில் செல்லவும் மாட்டேன். அதில் என்னை கவனமா பார்த்துக்க’ என்று சொல்லி இருக்கிறார். அதனால்தான் அவரது போட்டோவை வெளியிடவில்லை.
ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட அங்கிருந்த நர்ஸ்களுக்கு நிறைய ஹெல்த் டிப்ஸ் சொல்வார். பெண்கள் எப்போதுமே தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார். நர்ஸ்களிடம் ஹேர்ஸ்டைலை இப்படி வச்சுக்கங்க, அப்படி வச்சுக்கங்க என்றெல்லாம் டிப்ஸ் கொடுப்பார். ஆஸ்பத்திரியில் இருக்கும்போதுகூட மேக்கப் இல்லாமல் இருந்தது இல்லை. தன்னை எப்போதும் அழகாகவே வைத்துக் கொள்வதைத்தான் விரும்புவார்.
அதனால்தான், அவர் மறைந்தபோது அவரது முகம் கொஞ்சமும் வாடாமல் இருக்கும்படி மேக்கப்போட்டு கலையாமல் பார்த்துக்கொண்டேன்” என்று கலங்கிய கண்களோடு நினைவுகூர்ந்தார்.
ஜெயலலிதா இன்றி போயஸ் கார்டன் இல்லமே அமைதியும் வெறுமையுமாக இருப்பதின் வேதனையை கசிந்தவாறே அதிகம் யாருடனும் பேசாமல் ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார் சசிகலா!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic