சென்னையிலிருந்து வெளி மாநிலங்களுக்குப் புறப்படும் வாகனங்கள் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் சுங்கச்சாவடி, சோழிங்கநல்லூருக்கு அடுத்து இருக்கும் சுங்கச்சாவடி, பூந்தமல்லிக்கு அருகில் இருக்கும்
போரூர் சுங்கச்சாவடிகளின் வழியேதான் வெளி இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், சில்லறை தட்டுப்பாடு காரணமாக இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
கருப்புப் பணப்புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும்கூட கடும் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.
பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியது. இதில் முக்கியமாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 2ஆம் தேதி (நேற்று முன்தினம்) நள்ளிரவு வரை சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் தொடங்கி உள்ளது. வாகன ஓட்டிகளிடம் இருந்து வேகமாக கட்டணம் பெற்று தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் சுங்கச்சாவடிகளில் ‘ஸ்வைப்’ எந்திரமும் பயன்படுத்தப்பட்டது.
மேலும், கூட்ட நெரிசல் மற்றும் நேரமிழப்பை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் தகுந்த சில்லறை எடுத்து வருமாறும் மத்திய அரசு அறிவித்து இருந்தது. எனினும் பல சுங்கச்சாவடிகளிலும் நேற்று வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை காண முடிந்தது.
குறிப்பாக, மதுரவாயல் – தாம்பரம் செல்லும் புறவழிச்சாலையில் போரூரில் சுங்கச்சாவடி உள்ளது. சுங்கக்கட்டணம் வசூலிக்காததால் கடந்த சில தினங்களாக காலியாக இருந்த இந்தச் சுங்கச்சாவடி நேற்று முதல் கடும் வாகன நெருக்கடிக்கு ஆளானது. இந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் சுங்கச்சாவடியில் சரியான சில்லறை கொடுத்து ரசீது பெற்று சென்றனர். சிலர் புதிய ரூபாய் 2,000 நோட்டை கொடுத்ததால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். எனினும் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலை நாடு முழுவதும் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-வை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி போக்குவரத்து அதிகம் என்பதால் மேலும் தீவிரமடைந்துள்ளது. வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள சுங்கச்சாவடிகள் சிலவற்றில் ராணுவம் குவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.
‘சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்படும்’ என்று லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். எனவே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments