Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹரிஷ் ராவத் - உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற மத்திய அரசு முடிவு


உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற மத்திய மந்திரி சபை பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் அங்கு ஹரிஷ் ராவத் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.

ஜனாதிபதி ஆட்சி:

உத்தரகாண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி தூக்கினர். இதைத்தொடர்ந்து மாநில அரசில் மிகப்பெரும் குழப்பம் நிலவியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஹரிஷ் ராவத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நைனிடால் ஐகோர்ட்டு, ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்ற மத்திய அரசு, ஐகோர்ட்டின் உத்தரவுக்கு (ஜனாதிபதி ஆட்சி ரத்து) தடை பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:

இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதன் நியாயத்தன்மை குறித்து ஹரிஷ் ராவத் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், உத்தரகாண்ட் சட்டசபையில் மே 10–ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டில் அளிக்க வேண்டும் எனவும், வாக்கெடுப்பின் முடிவை சுப்ரீம் கோர்ட்டே 11–ந்தேதி அறிவிக்கும் எனவும் உத்தரவிட்டனர்.

அதன்படி மாநில சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்ததால், அவர்களை தவிர மீதமுள்ள 61 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்:

மொத்தமுள்ள 61 பேரில் ஹரிஷ் ராவத்துக்கு ஆதரவாக 33 பேரும், எதிராக 28 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது.

இந்த விவரங்களை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து, சட்டசபை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான முதன்மை செயலாளர் ஜெய்தேவ் சிங் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும் வாக்கெடுப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளும் நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திரும்ப பெற உத்தரவு:

ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் தீபக் மிஷ்ரா மற்றும் ஷிவகீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரிஷ் ராவத் வெற்றி பெற்றதாக அறிவித்தது. மேலும் உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், ஹரிஷ் ராவத்தை முதல்வராக உடனே பதவியில் அமர்த்துமாறும் உத்தரவிட்டது.

அப்போது நேரில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

ஆதரவாளர்கள் கொண்டாட்டம்:

இதைத்தொடர்ந்து நேற்று மத்திய மந்திரி சபை கூடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தது. பின்னர் அங்கு அமலில் இருக்கும் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுமாறு பரிந்துரை செய்து ஜனாதிபதி பிராணப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஹரிஷ் ராவத் மீண்டும் முதல்வராகிறார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மாநிலத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஹரிஷ் ராவத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்டில் ஜனநாயகம் வென்றுள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இதன் மூலம் பிரதமர் நரேந்திரமோடி பாடம் படித்திருப்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் வாக்கெடுப்பு:

இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து 9 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்துள்ள மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனு மீது விசாரணை நடத்தி அவர்களின் தகுதி நீக்கம் செல்லாது என கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் உத்தரகாண்ட் சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நேற்று கூறினர்.

மேலும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதன் நியாயத்தன்மை குறித்து ஹரிஷ் ராவத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic