அவ்வளவு
பிடிக்குமென
எப்போதும்
மல்லிகைதான்
சூடுவாள்
ரோஜா
வைப்பதென்றாலும்கூட
வெள்ளைதான்
தேர்ந்தெடுப்பது
கேட்காமலேயே
நீட்டிவிடுவார்
பேன்ஸி ஸ்டோரிலிருப்பவர்
வெள்ளை ரிப்பனை
நிறங்களே
இல்லாததுதான்
வெள்ளையென்றால்
கோபித்துக் கொள்வாள்
கருவாச்சியும்
குட்டச்சியும்
பட்டப்பெயரே
வைத்துவிட்டனர்
வெள்ளைக்காரியென
குழுப்போட்டிகளிலும்
முந்திச் சொல்வாள்
நாங்கெல்லாம்
ஒயிட் டீமென்று
உடைந்துவிடுமென்பதால்
ஊதாமலே
வைத்துக்கொள்வாள்
வெள்ளை பலூன்களை
வெள்ளைப் பட்டாம்பூச்சி
வெள்ளை ராக்கடி
வெள்ளை கவுண்
வெள்ளை வெயில்
வெள்ளை மாப்பிள்ளையென
வெள்ளை இராஜ்ஜியத்தில்தான்
கோலோச்சினாள்
பொட்டழித்து
வண்ணங்கள் சிதறி
கண்ணாடி வளையல்கள் உடைபட
அவளுக்குப் பிடிக்காதுபோன
வெள்ளையொன்றோடு
ஊரார் நெருங்குகையில் மட்டும்
விசும்பத்தொடங்கினாள்
விடுபட முடியாத
விதியின் விளையாட்டொன்றில்...
--கார்த்தி


No comments:
Write comments