தமிழகத்தில் அடுத்து நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2019ல் நடைபெறவுள்ள மக்களைவை தேர்தல், இரண்டிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2019ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம். இதில் 20 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோல் உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் தனித்தே போட்டியிடுவோம். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு மாதத்திற்கு முன்பு சின்னம் கிடைத்து அதனை மக்களிடத்தில் எடுத்துச்சென்று, வாக்குகளுக்கு பணம் கொடுக்காமல் எங்களுக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மதிப்பு மிக்கது. லஞ்ச, ஊழல் இல்லாத தூய ஆட்சியை விரும்பியே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இதை தொடக்கமாக வைத்து தொடர்ந்து முன்னேருவோம்.
ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்களாக இருந்து செயல்படுவோம் என்று கூறுகின்றனர். ஜனநாயக முறைப்படி இதனை வரவேற்கின்றேன். சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. நூறு சதவிகித வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா விஷயத்தில் தோற்றுவிட்டது. அதனை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அன்பு தென்னரசு, வியன்னரசு, திருச்சி மாவட்ட தலைவர் பிரபு உள்ளிட்ட ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments