கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என நம்பிக்கை இருப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
காயிதே மில்லத்தின் 121-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்த்தி மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
கேள்வி:
சிறுபான்மை இனத்துக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க இனி சட்டப்பேரவையில் என்ன செய்ய இருக்கிறது?
பதில்:
ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், எப்போதும் தி.மு.க தொடர்ந்து சிறுபான்மை சமுதாயத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
கேள்வி:
கச்சத்தீவு செல்வதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறித்து...
பதில்:
முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்போம் என்று பல முறை உறுதிமொழி தந்திருக்கிறார். தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார். எனவே, இந்த முறை அவர் நிச்சயமாக அந்தப் பணியை நிறைவேற்றி தருவார் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்:
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
உலக சுற்றுச்சூழல் தினமான ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 5), நாம் வசிக்கும் இந்தப் பூமி பந்தைப் பசுமையாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
வன விலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிக்கும் இந்த முயற்சியைச் செயல்படுத்துவதில் அரசு நிர்வாகங்கள் மட்டும் ஈடுபட்டு முழுமையான வெற்றியை பெற்றுவிட முடியாது.
ஒவ்வொரு தனி மனிதனும் தம்மாலான சிறு பங்களிப்புகளை வழங்கி, வன விலங்குகளை வேட்டையாடாமல் பாதுகாக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வன விலங்குகள் விற்பனை மற்றும் அவற்றில் இருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருள்களைப் புறக்கணிப்பது, வன விலங்குகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் செயல்படுவது போன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments