சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராதம் ஒன்றை போலீசார் கொண்டு வந்துள்ளனர். தவறு செய்யும் பிள்ளைகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களுக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். சென்னை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் அலுவலக நேரங்களில் கடும் நெரிசலில் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். விபத்துக்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன.
இதுஒருபுறம் இருக்க, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தேவையற்ற நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து நடைபெறுவதற்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. இருசக்கர வாகனங்களில் 3 நபர்கள் செல்லக்கூடாது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என பல சட்டங்களை கொண்டு வந்தாலும் வாகன ஓட்டிகள் பலர் அதனை கண்டுகொள்வதே கிடையாது. இதனால், விபத்துகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. விதிமீறுவோர் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தாலும், விதிமீறும் வாகன ஓட்டிகளால் இன்னல்கள் தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக, சென்னை நகரில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், ஓட்டுனர் உரிமம் பெறாமல், ஆபத்தான முறையில் பைக் ஓட்டி செல்வது அதிகரித்துள்ளது.
அதிலும், ஒரே பைக்கில் மூன்று மாணவர்கள் பயணிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இது, போலீசாருக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக போக்குவரத்து போலீசார் புதிய அபராதம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர். அதாவது 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் பைக் ஓட்டினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, அந்த சிறுவனை காவல் நிலையம் கொண்டு சென்று அபராதம் விதிக்கவும், அது மட்டுமல்லாமல் சிறுவனின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அந்த பெற்றோருக்கும் 500 ரூபாய் அபராதம் என மொத்தத்தில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் கட்டிய பிறகு பெற்றோரிடம் போலீசார் வாகனத்தை ஒப்படைக்கின்றனர்.
இந்த புதிய நடைமுறை கடந்த 2 நாட்களாக அமலுக்கு வந்துள்ளது. வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை பெறப்பட்டது. அபராதம் கட்டிய பிறகு தொடர்ந்து இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments