ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை தலைவர் கன்ஹையா குமார் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். வீடியோவை மாற்றுவதாலும், மாட்டுக்கறியை மாற்றுவதாலும் நாடு மாறிவிடப்போவதில்லை என கூறியிருக்கிறார்.
தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டது தொடர்பான மத்திய அரசு வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் தொடர்பாகவும் கன்ஹையா குமார் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கன்ஹையா குமார் அதில் தெரிவித்திருப்பதாவது, தாத்ரியில் கொல்லப்பட்டவர் முதலில் ஆட்டுக்கறிதான் வைத்திருந்தார் என்று ஆய்வு தெரிவித்தது, தற்போது அது மாட்டுக்கறியாகிப்போனது, இப்படி மாட்டுக்கறியாக மாற்றுவதாலோ, அல்லது எங்கள் பல்கலைகழகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் வீடியோவை மாற்றுவதாலோ நாடு மாறிவிடப்போவதில்லை. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் சீராகும்போது நாடும் தானாகவே மாறிவிடும். உங்களது ஆட்சியின் கீழ் இந்திய நாடு மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்குச்சென்றுவிட்டது. பெருத்த நம்பிக்கையுடன் இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள், அவர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்திய நாட்டில் அவசகரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சூழ்நிலை போல இன்று ஒவ்வொரு பல்கலைகழகங்களிலும் சூழ்நிலை நிலவுகிறது. நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது "அச்சே தின்"(நல்ல காலம்) வரப்போகிறது என்று கூறினீர்களே! அது இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை உண்மையிலேயே ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் 200 கோடி ரூபாய் செலவழித்து அதனை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாததால் தான், வளர்ச்சி ஏற்பட்டது போன்ற நிலையை மக்களுக்கு காட்ட கோடிகணக்கில் பணம் செலவழிக்கிறீர்கள். விளம்பரத்திற்காக 200 கோடி செலவிட அரசுக்கு பணம் இருக்கிறது ஆனால் ஏழை ஆராய்ச்சி மாணவர்களின் படிப்பிற்காக உதவித்தொகை வழங்க 99 கோடி இல்லை என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? புதிய வேலை வாய்ப்பு துவங்கப்படவில்லை, தினம் தினம் வட்டிக்காரர்களின் நெருக்கடியினால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். ஏழை இன்னமும் ஏழையாகிக்கொண்டிருக்கிறான், இதுதான் இந்திய நாட்டின் உண்மை நிலை என்று கன்ஹையா குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவிற்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்ட கன்ஹையா குமார் தற்போது ஜாமினில் வெளியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments