குஜராத்தின் கிர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிங்கத்தோடு செல்பி புகைப்படம் எடுக்கக்கூடாது என்று அந்த மாநில வனத்துறை எச்சரித்துள்ளது.
குஜராத்தில் ஜுனாகத், சோம்நாத், அம்ரேலி மாவட்டங்களுக்கு உட்பட்ட 1412 கி.மீட்டர் பரப்பளவில் கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இது ஆசிய சிங்கங்களின் சரணாலயம் ஆகும். வங்கப்புலிகள், சிறுத்தைகள், மான்கள், முதலைகள், எருதுகள், மலைப்பாம்பு உள்ளிட்டவையும் அங்கு உள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிர் வனப்பகுதியில் 523 சிங்கங்கள் உலவுகின்றன. இவற்றை காண கிர் பூங்காவுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். அவர்களில் பலர் சிங்கங்களுடன் செல்பி புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து குஜராத் மாநில வனத்துறை தலைமை பாதுகாவலர் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிர் வனப்பகுதியில் சிங்கங்களுடன் செல்பி புகைப்படம் எடுக்க இளைஞர்கள் தங்கள் உயிரை பணயம் வைப்பது கவலை அளிக்கிறது. சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்க்க இத்தகைய விபரீத செல்பி முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
செல்பி புகைப்படம் எடுக்க சிங்கங்களுக்கு மிகவும் அருகே இளைஞர்கள் செல்கின்றனர். இது உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும் சட்டப்பூர்வமாகவும் இது தவறான நடவடிக்கை. எனவே சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சிங்கத்தோடு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த உத்தரவை மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கிர் வனப்பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன், ஒரு பெண் உட்பட 3 பேர் சிங்கம் தாக்கி உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments