Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 1, 2016

சுவாதி கொலை - கொலைகாரனை நெருங்குகிறது போலீஸ்


சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி (24). செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.30 மணிக்கு வாலிபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.


6.30 முதல் 6.40 மணிக்குள் நடந்தது என்ன?

இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கு எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முதல்கட்டமாக தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெளியே தனியார்  கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அதில், வாலிபர் ஒருவர் காலை 6.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதும் 6.40க்கு வெளியே வருவதும் தெரியவந்தது. அதாவது 10 நிமிடத்திற்குள் சுவாதியை கொலை செய்துவிட்டு அதே வேகத்தில் தப்பி வெளியேறியதும் தெரியவந்தது.


ஓடி ஒளியும் குற்றவாளி:

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் கொலையாளி என கருதப்படும் நபர் பதற்றத்துடன் வேக வேகமாக நடப்பதும், எதிரில் ஒரு நபர் வரும்போது திடீரென தலையை தொங்கவிட்டபடி செல்லும் காட்சிகளும் இருந்தது. மேலும், ரயில்வே சுவற்றின் மீது ஏறி அந்த வாலிபர் ஓடுகிறார். இந்த புகைப்படம்தான் முதலில் போலீசாரால் வீடியோவாகவும், புகைப்படமாகவும் வெளியிடப்பட்டது. இந்தக் காட்சியை நிச்சயம் அந்த நபர் பார்த்து இருப்பார். அவர் கொலையாளியாக இல்லாத பட்சத்தில், நேரடியாக போலீசாரிடம் வந்து, ‘அது நான் இல்லை’ என்று கூறியிருக்கலாம். ஆனால், அவன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவன்தான் கொலையை செய்து இருக்க வேண்டும் என்றும் போலீசார் விசாரணை சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.


சென்னையில் கொலை ஆந்திராவில் செல்போன்!

கொல்லப்படும் வரை சுவாதியிடம்தான் அவரது செல்போன் இருந்தது. பிளாட்பாரத்தில் சரிந்து விழுந்ததும், அவரிடம் இருந்த செல்போனைக் காணவில்லை. அந்த செல்போன் தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த செல்போனை இதுவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கொலை நடந்த பிறகு சுவாதியின் ஆண் நண்பர் போன் செய்துள்ளார். போனை எடுத்தவர், பேசாமல் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால், அந்த செல்போனை கொலையாளியே எடுத்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்த மற்றொரு தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.


கமிஷனர் நேரடி விசாரணை:

சுவாதியின் பேஸ்புக் பக்கம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இணைந்திருந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் நடந்த விசாரணையின் முடிவில், 2 வாலிபர்கள் சிக்கினர். போரூர் மற்றும் பூந்தமல்லியை சேர்ந்த அந்த வாலிபர்களிடம் போலீஸ் கமிஷனர் டி.கே ராஜேந்திரனே நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.


திருமணத்துக்கு குறுக்கே நின்றது எது?

சுவாதி கொலைக்கு பிறகு, அவரின் 3 தோழிகளிடமும் தீவிர விசாரணை நடந்தது. அப்போது கிடைத்த தகவலின் படி, வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பர், சிவில் இன்ஜினியராக உள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆண் நண்பருக்கும் சுவாதிக்கும் திருமணம் நடக்க இருந்தது. இது தொடர்பாக இரண்டு பேரும் அவர்களுடைய வீட்டில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் கொலை நடந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த திருமண பேச்சு தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயங்கள் கூட சுவாதியின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில்தான் தெரியவந்துள்ளது. திருமணம் நின்றுபோன ஆத்திரத்தில்தான் இந்த கொலையை அந்த ஆசாமிதான் ஆள் வைத்து கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


நீதிமன்ற கெடு முடிந்தது:

சுவாதி கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் விதித்த 2 நாள் கெடு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இருப்பினும் இன்னும் கொலையாளி சிக்கவில்லை. இது போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.


கொலையாளி கர்நாடகாவை சேர்ந்தவனா?

கொலையாளி கொலைக்கு பயன்படுத்திய வீச்சரிவாள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் அரிவாள் என்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த  குறிப்பிட்ட சமுதாய மக்கள் அந்த வகை அரிவாளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே கொலையாளி  அங்கிருந்து அரிவாளை வாங்கினாரா? அல்லது கொலையாளி அந்த பகுதியை சேர்ந்தவரா?  என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளி கர்நாடகாவை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றே போலீசார் சந்தேகிக்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் சுவாதி சென்னையில் பணிபுரிவதற்கு முன்பு கர்நாடகா மாநிலம் மைசூரில் 6 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் சில மாதங்கள் அங்கு பணி புரிந்துள்ளார். எனவே அவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் யாரிடமாவது பிரச்னை ஏற்பட்டதா என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.


கொலையாளியின் புதிய புகைப்படம்:

சுவாதி கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பது இன்னும் தெரியாத நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெளியே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் திரும்ப திரும்ப போட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.  வீடியோவில் பதிவாகி இருந்த வாலிபரின் புகைப்படம் தெளிவாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு வீடியோ காட்சியில் இருக்கும் புகைப்படம் கம்யூட்டர் தொழில் நுட்பத்துடன் தெளிவாக்கப்பட்டது. 


எந்த கலர் சட்டை?

பழைய போட்டோவில் கொலையாளி என்ன வண்ணத்தில் உடை அணிந்துள்ளார் என்பது கூட தெரியாமல் இருந்தது. ஆனால் போலீசார் நேற்று வெளியிட்ட புகைப்படத்தில் கொலையாளி அணிந்திருக்கும் உடையின் நிறம் தெளிவாக தெரிந்தது. நீலம் மற்றும் வெள்ளை கலரில் கட்டம்போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். கருப்பு கலரில் பேண்ட் அணிந்திருக்கும் கொலையாளி காலில் ஷூ அணிந்துள்ளார். தோளில் கல்லூரி மாணவர் போல டிராவல் பேக் ஒன்றையும் மாட்டியுள்ளார். இவை அனைத்தும் புதிய போட்டோவில் மிகவும் தெளிவாக தெரிகிறது. ஆனால் முகம் மட்டும் தெளிவாக இல்லை. இதனால் புதிதாக பார்ப்பவர்கள் கொலையாளியை அடையாளம் காண்பது சிரமமே. ஆனால் கொலையாளியை அடிக்கடி பார்த்த நபர்களாக இருந்தால் அவர்களால் புதிய போட்டோவை பார்த்தவுடன் எளிதாக அவனை அடையாளம் காட்ட முடியும். அதற்கேற்ற வகையிலேயே போலீசார் வெளியிட்டிருக்கும் புதிய படம் உள்ளது. எனவே கொலையாளியை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியபடுத்த வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டுள்ளனர். மேலும், உயர் காவல் அதிகாரிகளின் செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், போன் செய்தோ, குறுந்தகவல்கள் மூலமோ, வாட்ஸ்அப் மூலமோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதில், விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic