சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திருப்பூரில் ரூபாய் 570 கோடி ரூபாய் கொண்டு சென்றதாக கூறப்பட்ட மூன்று லாரிகளின் எண்களும் போலியானவை என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 13ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது மூன்று கண்டைனர் லாரிகளில் உரிய ஆவணங்களின்றி ரூபாய் 570 கோடி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நாள் கழித்தும் யாரும் அதற்கு சொந்தம் கொண்டாட முன்வரவில்லை, இதனால் பரபரப்பு மேலும் தொற்றிக்கொண்டது. இறுதியில் சம்பவம் நடைபெற்று ஒரு நாள் கழித்து பாரத ஸ்டேட் வங்கி சிக்கிய பணம் தங்களுடையதுதான் எனவும், கருவூலத்திலிருந்து வங்கியின் மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்காக கொண்டு செல்லபட்டது என விளக்கம் கொடுத்தது.
இது தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று சொன்ன ரிசர்வ் வங்கியும், பின்னர் ஆமாம் தங்களுடைய ஒப்புதலின் பெயரிலேயே பணம் கொண்டு செல்லப்பட்டது என அந்தர் பல்டி அடித்தது. இதனால் இவ்விவகாரம் தொடர்பாக பலருக்கும் சந்தேகம் எழுந்தது. உரிய ஆவணங்கள் இன்றி ஒரு வங்கி இவ்வளவு பணத்தை எப்படி கொண்டு செல்லலாம் எனவும், அப்படியே கொண்டு செல்வதாக இருந்தாலும் எந்த ஒரு வங்கியும் இது போன்ற லாரிகளில் கொண்டு சென்றதில்லை எனவும், எந்த ஒரு காவ்லதுறையினரின் பாதுகாப்பு இல்லாமல் கொண்டு சென்றது ஏன்? என பலதரப்பினரிடையே சந்தேக கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் திமுக சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.கே.எஸ் இளங்கோவன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றமும் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கட்டளையிட்டது. இவ்விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிபிஐ முதற்கட்டமாக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் லாரிகளின் எண்கள் போலியானவை என தெரிவித்துள்ளனர். திருப்பூரில் உள்ள மோட்டார் சைக்கிளின் எண்களை இந்த லாரிகளுக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவ்விசாரணையின் ஆரம்பக்கட்டத்திலேயே அதிர்ச்சிகரமான செய்தியை சிபிஐ வெளியிட்டுள்ளதை அடுத்து, மேலும் விசாரணை நடக்கும்போது இன்னும் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
செய்தி :: புகழேந்தி

No comments:
Write comments