தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கடையில் 3 மாடிகளில் பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் 10 மணியளவில் கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். கடைக்கு வெளியில் காவலாளிகள் மட்டும் இருந்தனர்.
இரவு 12 மணிக்கு ஜவுளிக்கடையின் கீழ் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட காவலாளி உடனடியாக கடையின் பங்குதாரர் நெல்சனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு கடைக்கு புறப்பட்டு வந்தார்.
அதற்குள் முதல் தளத்தில் பற்றி எரிந்த தீ மற்ற 2 தளங்களுக்கும் மளமளவென பரவியது. இதில் அங்கிருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தன. கடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த அலங்கார மரப்பொருட்களும் சேர்ந்து எரிந்ததால் கட்டிடம் முழுவதும் தீ ஜூவாலைகள் கொளுந்து விட்டு எரிந்தன.
சம்பவ இடத்திற்கு தென்காசி தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. இதனால் செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், அம்பை என நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் 14 தீயணைப்பு வண்டிகள் தென்காசிக்கு வரவழைக்கப்பட்டன.
தீயணைப்புத் துறை துணை இயக்குநர் சரவணக்குமார், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சரவணபாபு ஆகியோர் தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் வந்தது.
அதன் பின்பு சுவாச கவசம் அணிந்தபடி ஜவுளிக்கடைக்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த துணிகள் மீதும் தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஜவுளிக்கடை பங்குதாரர் நெல்சன் கூறியதாவது:-
வழக்கமாக இரவு 9.30 மணிவரை கடையில் வியாபாரம் நடக்கும். அதன் பின்னர் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு 10.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு செல்வோம். அதுபோல் நேற்றும் இரவு 10.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றேன். சிறிது நேரத்தில் காவலாளி போன் செய்து கடையில் தீப்பற்றியதாக கூறினார். உடனே பதறி அடித்துக்கொண்டு கடைக்கு ஓடிவந்தேன். வரும்போதே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தேன். ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைந்தனர்.
கடையில் ஆடி கழிவு விற்பனைக்காக ரூ.10 கோடி மதிப்பிலான ஜவுளிகள் இருந்தன. ரூ.2 கோடி மதிப்பில் மரப்பொருட்களால் அலங்காரம் செய்திருந்தோம். தற்போது அனைத்தும் தீவிபத்தில் நாசமாகி உள்ளன. மொத்த சேத மதிப்பு எவ்வளவு? என்பது உடனடியாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிபத்து நடந்த போது ஜவுளிக்கடைக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்தை தென்காசி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சகாய்ஷங் பார்வையிட்டார். மின்கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments