''மனைவி, குழந்தைகளின் சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தாவது ஜீவனாம்சம் வழங்குவதில் தவறு கிடையாது'' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த செல்வராஜன் என்பவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ரெங்கசுபத்ராவுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தங்குவதற்கு வீடு, ஜீவனாம்சம், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ரெங்கசுபத்ரா கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம், வீட்டு வாடகைக்காக 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும், சீர்வரிசை பொருட்களை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செல்வராஜன், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வீட்டு வாடகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க தேவையில்லை என்றும், ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சமும், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்கினால் போதும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செல்வராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ் அளித்த தீர்ப்பில், "இருதரப்பினரின் வாதங்களையும் மிகுந்த கவலையோடு கேட்டேன். உடல் ரீதியான பாதிப்பை விட மன ரீதியான பாதிப்பு கொடுமையானது. ரெங்கசுபத்ராவுக்கு மனுதாரர் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். மனுதாரர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. சட்டப்படி ரெங்கசுபத்ராவுக்கு மனுதாரர் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
மனுதாரர் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளதாகவும், வேலை எதுவும் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகிறார். இதுபோன்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க வேலையில்லை என்று கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது. மனுதாரர் கூலி வேலை கூட செய்யலாம். பிச்சை எடுத்தாவது மனைவி மற்றும் குழந்தைகளின் சாப்பாட்டுக்காக ஜீவனாம்சம் வழங்குவதில் தவறு கிடையாது" என்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
செய்தி :: சாஹிப்...
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments