Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

பசு காவலர்களில் 80% பேர் சமூக விரோதிகள் - மோடி


பசுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அனைவரும் சமூக விரோதிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். பசு மீது கொண்டுள்ள பக்தி வேறு, பாதுகாப்பு வெறி வேறு என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மத்திய அரசுக்கு பொதுமக்கள், தங்களது ஆலோசனைகளையும் குறைகளையும் தெரிவிப்பதற்காக "ம்ஹ்எர்ஸ்' என்ற பெயரில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நிகழ்ச்சி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, முன்னறிவிப்பின்றி பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

பசு காவலர்கள் என்ற பெயரில் அமைப்புகள் தொடங்கி பலர் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்னை மிகவும் கோபமூட்டுகிறது. பசு காவலர்கள் என்ற முகத்திரையுடன் வலம் வரும் நபர்களின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும். அவர்களில் 80 சதவீதம் பேர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களாகத்தான் இருப்பர். பகலில் பசுக் காப்பாளர்களாகவும், இரவில் சமூக விரோதிகளாகவும் அவர்கள் உள்ளனர்.

பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றை நான் நடத்தியபோது, ஒரு பசு மாட்டின் வயிற்றில் இருந்து 2 வாளி பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டன. வெட்டிக் கொல்லப்படும் பசுக்களைக் காட்டிலும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறக்கும் பசுக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

உண்மையான பசுப் பாதுகாவலர்கள் பிளாஸ்டிக் ஆபத்துகளில் இருந்து அவற்றை மீட்க வேண்டும். மாறாக, மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமூக சேவை அல்ல. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை சார்ந்த செயல்பாடுகளைத்தான் சமூகப் பங்களிப்பாகக் கருத முடியும். ஊரக வளர்ச்சித் திட்டம்: நகர்ப்புறங்களில் நாள்தோறும் புதிய வளர்ச்சிகளைப் பார்க்கிறோம். அதுபோன்ற அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைப்பது அவசியம். தேசத்தின் கடைசி கிராமத்துக்கும் உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுதான் உண்மையான வளர்ச்சி.

அதைக்கருத்தில் கொண்டு ஊரகப் பகுதிகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள அடிப்படை கட்டமைப்பை உருவாக்கித் தரும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 300 கிராமங்கள் வளர்ச்சி மையங்களாகத் தரம் உயர்த்தப்படும். அந்த கிராமங்களில் மின்னணு (டிஜிட்டல்) தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

நல்லாட்சி நிர்வாகம்: சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டு வந்தாலும் இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை எட்டி வருகிறது. நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்தபோதிலும் இந்த வளர்ச்சியை நாம் எட்டினோம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேசத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாகத் தொடர்ந்தால், உலக நாடுகளில் இந்தியாதான் முதன்மையாக இருக்கும்.

இன்றைய சூழலில் பஞ்சாயத்து அளவில் ஏதாவது நடந்தால் கூட அதற்கும் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்ரீதியாக அது சரியாக இருந்தாலும், பிரதமர் பொறுப்பு வகிப்பவர்களுக்கு அது கூடுதல் சுமையையும், சிக்கலையும்தான் ஏற்படுத்தும்.

நல்லாட்சி என்பது மக்களின் குறைகளைக் கேட்பது மட்டுமல்ல; அவற்றுக்குத் தீர்வு காண்பதும்தான். பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான அடித்தளம். மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி ஆட்சி நிர்வாகத்தில் பொதுமக்களும் பங்களிக்க வேண்டும்.

சிறந்த நிர்வாகம் இல்லை என்றால், எத்தகைய நலத் திட்டங்களை வகுத்தாலும் அவை மக்களைச் சென்றடையாது. அதனால் கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணம்தான் விரயமாகும். வேளாண்மையையும், விவசாயிகளையும் பாதுகாப்பது மிக முக்கியமானது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றார் மோடி.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic