விக்ரம் நடிக்கும் படங்கள் அடுத்த தலைமுறைக்கான விதைகள் என்று 'இருமுகன்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இருமுகன்'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன், நிவின் பாலி மற்றும் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "என்னுடைய நர்ஸ் கதாபாத்திரம் எல்லாம் ரொம்ப சின்னது. எங்களுடைய குருஜியைத் தான் 'இருமுகன்' ட்ரெய்லரில் பார்த்தீர்கள். திரையில் இன்னும் அதே இளமையோடு இருக்கிறார். அவருக்கு எல்லாம் வயசே ஆகாது. கல்லூரியில் படிக்கும் போது 'சாமி' படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் இரவு தான் கிடைத்தது. அப்படி படம் பார்த்த நான் இன்று அவருடைய இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
விக்ரம் சார் நிறைய நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் போது நான் தொகுத்து வழங்கி கொண்டிருப்பேன். எப்போது பார்த்தாலும் "நீ ஒரு ஹீரோ" என சொல்லிக் கொண்டே இருப்பார். 'மெரினா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அப்படத்தின் விளம்பர வீடியோவுக்கு அவரிடம் "எனக்காக ஒரு 2 வரி பாடித் தர முடியுமா சார்" என கேட்டேன். நான் எப்போதும் அந்த மாதிரியான விஷயங்களை பண்ணுவதில்லை, உனக்காக பண்ணித் தரேன் சிவா என்றார். எப்போதுமே எனக்கு ஊக்கமளிக்கக் கூடிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருப்பார்.
4 -5 மணி நேரம் ஒரு படத்துக்கு மேக்கப் போட்டதற்கே நான் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு படத்துக்கும் புதிது புதிதாக ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கிறீர்கள். அது அனைத்துமே தூண்டுதல் தான்.
'ரெமோ' படப்பிடிப்பில் பி.சி. சார் "'ஐ' படத்துக்காக விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன்" என்றார். அந்த விருதை எல்லாம் தாண்டி மக்களின் கைதட்டுக்கள் தான் பெரிய விஷயம் என நினைக்கிறேன். தேசிய விருதை எல்லாம் தாண்டிவிட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த விருது உங்களுக்கு மட்டும் தான் சேரும்.ஆனால் அவர் பண்ணும் படங்கள் எல்லாமே அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகத் தான் இருக்க போகிறது. அது தான் அவர் போடும் விதையாக நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
"நான் பங்கேற்கும் முதல் தமிழ் பட இசை வெளியீட்டு விழா 'இருமுகன்'. விக்ரம் சார் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்" என்று மலையாள நடிகர் நிவின் பாலி தெரிவித்தார்.
இறுதியாக பேசிய விக்ரம் 'இருமுகன்' படக்குழுவினர் அனைவருக்கும் தனது பேச்சில் நன்றி தெரிவித்தார். மேலும் "இங்கு நிறையப் பேர் பேசும் போது என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் சொன்னார்கள். அவர்களது வார்த்தைகளைக் கேட்கும் போது இன்னும் ஏதாவது பண்ண வேண்டும் என்று யோசிக்க வைக்கிறது" என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments