குஜராத் துயரங்களுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு, ஆனால் ஆனந்திபென் பட்டேல் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில், ஆனந்திபென் பட்டேல் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்–மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் பிரதமர் ஆனவுடன், முதல்–மந்திரி பதவியை ஏற்றவர்தான் ஆனந்திபென் பட்டேல்.
அவர் அதற்கு முன்பு, கடந்த 1998–ம் ஆண்டில் இருந்து குஜராத் பா.ஜனதா அரசுகளில் மந்திரியாக இருந்துள்ளார். 1941–ம் ஆண்டு பிறந்த ஆனந்திபென் பட்டேலுக்கு, வருகிற நவம்பர் 21–ந் தேதி, 75 வயது பூர்த்தி ஆகிறது.
75 வயது நிறைவடைந்த பா.ஜனதா தலைவர்கள், தாங்கள் வகித்து வரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே விதிமுறை வகுத்துள்ளார். இந்நிலையில் 75 வயது நிறைவடைய உள்ள நிலையில், குஜராத் முதல்–மந்திரி ஆனந்திபென் பட்டேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகல் பற்றி கட்சி மேலிடம் இன்று விவாதித்து முடிவு எடுக்கிறது.
அதிருப்தி:
வயது காரணம் கூறப்பட்டு இருந்தாலும், ஆனந்திபென் பட்டேலின் பதவி விலகலுக்கு அவர் மீதான கட்சி மேலிடத்தின் அதிருப்தியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
பட்டேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தை அவர் சரிவர கையாளவில்லை என்று கருதப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. நகரப்பகுதிகளில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற, ஊரகப் பகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
மேலும், சமீபத்தில், உனா பகுதியில் தலித்கள் தாக்கப்பட்ட சம்பவமும் பா.ஜனதாவுக்கு நாடு முழுவதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.
எனவே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், முதல்–மந்திரி மாற்றம் அவசியம் என்று கட்சி மேலிடம் கருதியதால், ஆனந்திபென் பட்டேல் பதவி விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடிதான் பொறுப்பு:
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, குஜராத் துயரங்களுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு, ஆனால் ஆனந்திபென் பட்டேல் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார் என்று விமர்சனம் செய்து உள்ளார்.
ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “குஜராத் பற்றி எரிவதற்கு மோடியின் 13 ஆண்டுகால ஆட்சியே பொறுப்பு, 2 ஆண்டு கால ஆனந்திபென் பட்டேலின் ஆட்சி கிடையாது. ஆனந்திபென் பட்டேல் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார். இத்தியாகத்தால் ஆளும் பாரதீய ஜனதாவை இம்மாநிலம் மற்றும் தேர்தல் நடைபெறும் இடங்களில் காப்பாற்றாது,” என்று கூறிஉள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments