அதிமுகவில் மாநிலங்களவை எம்.பியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்த இவர் இதற்கு முன் மாநகராட்சி அதிமுக மேயராகவும் இருந்திருக்கிறார். சசிகலா புஷ்பா தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளும், செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தாலும், ஜெயலலிதா இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்துவந்தார். தற்போது கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி விமான நிலையத்தில் வைத்து திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார் சசிகலா புஷ்பா.
இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக பேசபட்டு வந்த நிலையில், இன்று காலை கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும், கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொருப்புகளிலிருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டதாக அதிமுக தலைமை செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்று மாநிலங்களவையில் கலந்து கொண்ட சசிகலா புஷ்பா இவ்விவகாரம் தொடர்பாக பேசினார். தன்னை கட்சி தலைவர் (ஜெயலலிதா) கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார்.
"ஒரு எம்.பியை கட்சி தலைவர் கன்னத்தில் அறைகிறார் என்றால் ஒரு மனிதனின் கண்ணியம் என்னவானது?" என்று கேட்க, அதிமுக காரர்களே சசிகலா புஷ்பாவிற்கு எதிராக கூச்ச குழப்பமிட்டனர். மற்ற கட்சிக்காரர்கள் சசிகலா புஷ்பாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் தெரிவிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினாலும், அதிமுகவின் நவனீத கிருஷ்ணன் அவையின் முன்னர் வந்து சசிகலா கூறியதை அவைகுறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். "என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என என்னை வற்புறுத்துகின்றனர். நமது நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே? எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கப்பட்டு வருகிறது. எனக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை" என சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
தன்னை ராஜ்யசபா எம்.பியாக ஆக்கி வைத்ததற்கு ஜெயலலிதாவிற்கு நன்று தெரிவித்த சசிகலா புஷ்பா, ஆனால் ஒரு தலைவராக இருந்து கொண்டு ஒரு எம்.பியை கன்னத்தில் அறைவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? தனக்கு அரசு தரப்பிலிருந்து பாதுகாப்பு வேண்டும் என கோரினார். " நான் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும். என்னால் ராஜினாமா செய்ய இயலாது. எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் நான் இங்கே (ராஜ்யசபா) இருக்கிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவையின் துணைத்தலைவர் பி.ஜே கூரியன் கூறும்போது அவைத்தலைவர் தான் அனைத்து உறுப்பினர்களுக்கு பொருப்பாவார். எல்லா உறுப்பினர்களையும் பாதுகாப்பது போல் உங்களையும் பாதுகாப்பார் என தெரிவித்தார். அதே சமயம் இந்த அவைக்கு வர முடியாத எந்த ஒரு நபரின் பெயரையும் குறிப்பிட்டு பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்கட்சியின் சசிகலா புஷ்பாவை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினர்கள் அனைவரும் சசிகலா புஷ்பாவிற்கு ஆதரவாக குறல் கொடுத்தனர்.
தான் திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்தது உண்மைதான் என்றும், அவர் ஒரு நாகரீகமான மனிதர் அவரை அடித்தது என் தவறுதான் இதற்காக தான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சசிகலா புஷ்பா தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments