கடனை திருப்பி கொடுக்க மறுத்த நண்பரின் தலையை அரிவாளால் துண்டித்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் பெங்களூருரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் கெம்பதிம்மனஹள்ளியில் வசிப்பவர் சசிகுமார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கார் டிரைவர் மஞ்சுநாத்தும் நண்பர்கள். சசிகுமார் தனது நண்பர் மஞ்சுநாத்துக்கு அவசர தேவைக்காக ரூ.25 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார். பல மாதங்கள் ஆகியும் மஞ்சுநாத் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்ற சசிகுமார் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு மஞ்சுநாத் தர மறுத்ததால் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், தயாராக எடுத்து சென்ற அரிவாளால், மஞ்சுநாத்தின் வயிற்றில் சரமாறியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்ததும், கழுத்தை துண்டித்து தலையை மட்டும் பைக் பெட்டியில் வைத்து கொண்டு, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார்.
அங்கு போலீசார் முன்பு ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் சரணடைந்த அவர், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் கொலை செய்ததாக கூறினார். அவரது வாக்குமூலத்தை பெற்ற போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சடலம் கிடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Write comments