“நயன்தாரா, தொழிலில் ஈடுபாடு உள்ள திறமையான நடிகை” என்று பட விழாவில் நடிகர் விக்ரம் பேசினார்.
பாடல்கள்:
விக்ரம்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘இருமுகன்.’ இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். சிபுதமீன்ஸ் தயாரித்து உள்ளார். ‘இருமுகன்’ படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
“ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று உருவாக்குகிறோம். ‘இருமுகன்’ படம் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த படத்துக்கு நல்ல நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அமைந்துள்ளனர். நடிகர்களின் கதாபாத்திரங்களை வேறுமாதிரி பார்க்கலாம். இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.
இரு வேடம்:
இரு கதாபாத்திரங்களில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படம் சில பிரச்சினையில் இருந்தபோது, தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ் வந்து உடனடியாக படப்பிடிப்பை தொடங்கினார். நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோரை கொண்டு வந்து படத்துக்கு மேலும் பலம் சேர்த்தார். ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்தையும் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
இருமுகன் படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். நயன்தாரா இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேறு மாதிரி ‘மேஜிக்’ போல் இருக்கும். அவர் தொழிலில் ஈடுபாடு உள்ள திறமையான நடிகை. அர்ப்பணிப்புடன் நடித்து இருக்கிறார். நித்யாமேனனும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.”
இவ்வாறு விக்ரம் பேசினார்.
சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன் விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, “விக்ரம் என்னுடைய குரு. நான்கு, ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டு கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பு என்னை போன்ற நடிகர்களுக்கு படிப்பினையாக இருக்கும். அவருக்கு ‘ஐ’ படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள். விருது என்றால் உங்களை மட்டும்தான் சேரும். ஆனால் உங்களுடைய படங்கள் அடுத்த தலைமுறைகளை சென்று சேரும்” என்றார்.
விழாவில் நடிகர் நிவின்பாலி, டைரக்டர் ஹரி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா உள்பட பலரும் பேசினார்கள்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments