எங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடவேண்டாம் என பாகிஸ்தான் அரசுக்கு வங்கதேச அரசு எச்சரித்துள்ளது.
வங்கதேசத்தில் ஜமாத்தே இஸ்லாமி இயக்க தலைவர் மிர் காசிம் அலிக்கு நேற்று இரவு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "இது முழுக்க வங்கதேச நாட்டின் உள்விவகாரமாகும். இதில் தலையிடுவதற்கு பாகிஸ்தானிற்கு எந்த அதிகாரமும் கிடையாது." என தெரிவித்துள்ளது.
வங்கதேச அரசின் கூடுதல் வெளியுறவுச்செயலாளர் கமருல் அஹ்சன் பாகிஸ்தான் நாட்டு உயர் கமிஷனர் மெஹ்தாபை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பாகிஸ்தான் வங்கதேசம் பிரிவினையின் போது வங்கதேசத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியில், அம்மக்களுக்கு எதிராக பல குற்றங்களை புரிந்ததுடன் பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்திற்காக காசிம் அலி மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அடுத்த இரணு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. அதில் காசிம் அலியின் தண்டனை தங்களுக்கு மிகுந்த மன வேதனை தருவதாகவும், பொய்யான குற்றச்சாட்டுக்கள் மூலம் அவரை வங்கதேச அரசு கொலை செய்துவிட்டது என்றும், வங்கதேசத்தில் நீதி செத்துவிட்டது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments