பசுக்களை கடத்துபவர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தங்களை மிரட்டுவதாகவும் எனவே தங்களுக்கும் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வழங்கப்பட வேண்டுமென பசுகாவலர்கள் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குர்கோனில் இயங்கி வரும் பசு காவலர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி உரிமம் கோரியிருப்பது மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இரவு நேரங்களில் பசுக்களை கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. அவர்களை தடுத்து நிறுத்தும்போது அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பல முறை எங்கள் அமைப்பினர் மீது நாட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என பசு காவலர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஹரியானா மாநில பசு காவலர்கள் அமைப்பின் தலைவர் தர்மேந்திரா யாதவ் கூறியதாவது, மாடுகளை கடத்தும் 10ற்கும் மேற்பட்ட கும்பல் ஹரியானாவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதம் வைத்திருக்கின்றனர். நானே மூன்று முறை அவர்களை தடுக்க முற்படும்போது தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். எனவே தான் எங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்ததோடு காவல்துறையினரின் பாதுகாப்பும் கேட்டுள்ளோம் என்றார்.
கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் மாடு கடத்துபவர்களை தடுக்க முற்பட்டபோது விக்ராந்த் யாதவ் என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் கொதிப்படைந்த அவரின் கிராம மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதும், சாலை மறியலில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. சோனா மற்றும் பட்டோடி ஆகிய பகுதிகளில் கடந்த ஒன்னறை மாதங்களுக்கு முன்பு பசு காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டிருக்கிறது.
அதே சமயம் பசு காவலர்கள் அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், இறைச்சி விற்பவர்களையும் சந்தேகத்தின் பெயரில் தாக்குதல் நடத்துகின்றனர். இதை அவர்கள் ஒப்புக்கொள்வதோடு இது போன்ற சம்பவங்களால் தங்களது சமூகத்திற்கே அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் சில நாட்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து சரிதான் என்றும் கூறுகின்றனர்.
குர்கான் காவல்துற ஆய்வாளர் சந்தீப் குமார் எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் தங்களை பசுக்களை கடத்துபவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமம் வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

No comments:
Write comments