தமிழகத்தின் விடுதலை வீரர்களுள் தனக்கென ஒரு தனித்துவம் கொண்டவர் வ.உ.சி. சுதேசி இயக்கத் தலைவர். தொழிற்சங்கங்களை உருவாக்கிய முன்னோடி. திருக்குறள் வழியில் வாழ்ந்த பெரியவர். திருக்குறளை வேதம் என்றும் போற்றியவர். எம்மதத்தையும் சம்மதமாகக் கொண்ட சன்மார்க்க நெறியாளர். தமிழறிஞர். சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்ட வ.உ.சி-யின் பிறந்த நாள் இன்று.
வெள்ளைய ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு மும்முனைப் போர் நடத்திய மாபெரும் தியாகியின் வாழ்வு புறக்கணிக்கப்பட்ட பெரும் துயரத்தின் வரலாறு தமிழகத்தில் விந்தையாகத்தான் உள்ளது. “மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜையில் ஆங்கிலேயேர் - இந்தியர் வர்க்கத்தினரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர் வ.உ.சிதம்பரனார். அவர் வெறுக்கத்தக்க ராஜ துரோகி. வ.உ.சி-யின் எலும்புகள்கூட சாவுக்குப் பின் ராஜ துவேஷத்தை ஊட்டும்” என்று திருநெல்வேலி கலகம் குறித்தான தீர்ப்பில் நீதிபதி பின்ஹே மேற்குறித்தவாறு கூறி 40 ஆண்டு கால இரட்டை ஆயுட்கால ராஜதீவாந்திர தண்டனை வழங்கினார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி நகரமெங்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வெள்ளம்போல் கொந்தளிப்புடன் திரண்டு வ.உ.சி-யைச் சிறைக்குள் அனுப்பி வைத்தார்கள். வீரச்சிங்கம் வ.உ.சி. சிறைத்தண்டனை பெற்று நாலரை வருடம் கழித்து வெளியே வந்தபோது ‘வா’ என்று வரவேற்க கிட்டத்தட்ட மூன்று, நான்கு முக்கிய நபர்கள் தவிர யாரும் வரவில்லை. சுதேசிய கப்பல் கவிழ்ந்தது போன்று வ.உ.சி-யின் வீர சகாப்தத்துக்கும் ஆங்கிலேய நிர்வாகம் திட்டமிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
சுதேச இயக்கத்தின் உச்சகட்டம் 1906-1908. வ.உ.சி. காங்கிரஸில் சேர்ந்தது 26.12.1906. இரண்டே வருடங்களில் வ.உ.சி-யைச் சிறைக்குள் அனுப்பியது. வர்த்தகம் செய்ய வந்த வெள்ளையர்களை வர்த்தகம் மூலமே விரட்ட வேண்டும் என்று எண்ணிய முதல் மறத் தமிழன். சுதேச கப்பல் கம்பெனி மூலம் வெள்ளை வணிகர்களையும், தேசாபிமானிகள் சங்கத்தின் மூலம் வெள்ளை அதிகாரிகளையும், தொழிலாளர் சங்கத்தின் மூலம் வெள்ளை முதலாளிகளையும் திட்டமிட்டு மும்முனைப் போர் நடத்தி ஆங்கிலேய நிர்வாகத்தினரின் எல்லா வழிகளையும் செயலற்றதாக்கினார். மிரண்ட ஆங்கிலேயர் வ.உ.சி-யை ஒடுக்குவதற்கு நாடு கடத்தப்பட்ட தண்டனையை அளித்தாலும் வ.உ.சி-யை நினைத்தாலே ஆங்கிலேயர் கலங்கும் அளவுக்கு சிம்மச் சொப்பனமாக இருந்தார்.
இந்திய விடுதலை இயக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த சுதேசி இயக்கத்துடன் பாட்டாளி மக்களாகிய தொழிலாளர்களின் வர்க்க போராட்டத்தையும் இணைத்து புது பாதை போட்டவர் வ.உ.சி. இதற்கான உதாரணம் தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம். வார விடுமுறை இல்லாமலும், போதிய ஊதிய உயர்வு கிடைக்காமலும், உணவு அருந்த செல்வதற்கான இடைவெளி கொடுக்கப்பட்டாலும் கொத்தடிமைகளாக நடத்திய ஆங்கிலேய நிர்வாகத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர் வ.உ.சி. இப்போராட்டத்துக்காக பொது மக்களிடம் நிதி திரட்டி, எஞ்சிய செலவை தன் கையால் போட்டு தொழிலாளர்களின் பட்டினியை போக்கி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெள்ளையர்களை அதிர வைத்தார்.
தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவை தொடங்கி வைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர் என்றால் அதன் தொடர்ச்சியாக பாமரத்தனமுள்ள அடித்தட்டு மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச்செய்து அதனை விடுதலை இயக்கமாக மாற்றியமைத்தார் வ.உசி. அவரது வீரம் செறிந்த அரசியல் மேடைப் பேச்சுகளினால் வண்ணார் சமூகத்தினர் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்கள் ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்ய மறுத்தனர். ஜட்கா வண்டி ஓட்டும் குதிரை வண்டிக்காரர்கள் குதிரை வண்டிகளை ஓட்ட மறுத்தனர். இரவு நேரங்களில் வெள்ளையர்கள் தூத்துக்குடியில் தங்குவதற்கு அஞ்சி, ஏழு மலை தொலைவில் உள்ள முயல் தீவுக்குச் சென்று உறங்கி வந்தார்கள். அந்த அளவுக்கு வெள்ளையர்களின் கண்களுக்குள் விரலை விட்டு குடையும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தார் வ.உ.சிதம்பரனார். இக்காலத்திலேயேதான் “வந்தே மாதரம்” என்று கேலி செய்யும் தொனியில் வெள்ளையர்களுக்கு எதிராக கூவிவிட்டு ஓடிவிடும் வழக்கமும் உண்டானது.
வ.உ.சி. சிறையில் இருக்கும்போதே ஆங்கிலேய நிர்வாகம் சுதேசி கப்பல் கம்பெனியை ஒழிக்க பல வழிகளில் சதி திட்டம் தீட்டி வெற்றியும் கண்டது. சுதேசிய கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களே நஷ்டம் குறித்து வ.உ.சி-க்கு நோட்டீஸ் அனுப்பினர். சிறையில் இருந்த வ.உ.சி. பங்குதாரர்களுக்கு வரும் லாபத்திலும், நஷ்டத்திலும் சம பங்குண்டு என்று வலியுறுத்தி அதே சமயம் சிறையிலிருந்து வந்த பிறகு நஷ்டத்தை ஈடுசெய்வதாக கூறினார். இறுதியாக எந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் விடப்பட்டதோ அந்த ஆங்கிலேயே கம்பெனியிடமே சுதேசி கப்பலை விற்றுவிட்டார்கள். அச்சமயம் வ.உ.சி. சுதேசி நாவாய் புலம்பல் என்று ஒரு வெண்பா எழுதியுள்ளார்.
என் மனமும் என்னுடம்பும் என்சுகமும் என்னறமும்
என் மனையும் என் மகவும் என் பொருளும் - என் மணமுங்
குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்திடினும்
வென்றிடுவேன் காலால் மிதித்து.
மகாகவி பாரதியார், ‘சிதம்பரம் மானம் பெரிது! மானம் பெரிது! ஒரு சில ஓட்டை காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்று விட்டார்களே. அதைவிட கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காள குடாக்கடலில் மிதக்கவிட்டாலாவது எனது மனம் ஆறியிருக்குமே’ என்று கடுஞ்சினத்துடன் வ.உ.சி-யிடம் முறையிட்டுள்ளார்.
1912ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு திலகர் சகாப்தம் மங்கத் தொடங்கி காந்திய சகாப்தம் மிளிரத் தொடங்கியது. மனு போட்டு சுதந்திரம் கேட்கும் மிதவாத காங்கிரஸிடத்தில் வ.உ.சி. நம்பிக்கை வைக்கவில்லை. அதே சமயம் காந்தியுடன் வேற்றுமை கொண்டிருந்தாலும் தீவிர அரசியல் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இருந்தாலும் சிறைக்குப் பின்பான இறுதி வாழ்க்கை வரை வறுமையின் கொடுமை பிள்ளையின் வாழ்வில் தாண்டவமாடியது.
வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்த மில்வெண்
பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச் சொல்லும் தோலும் நலிந்து.
மகான் அரவிந்தரால் “பிரதம ஆரியபுருஷன்”, “கர்மவீரன்” என்று பாராட்டப்பட்ட வ.உ.சி-யை நம்மூர் காங்கிரஸ்காரர்கள் கொள்கை அளவில் வேறுபட்டதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். 1907ஆம் ஆண்டு நடந்த சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தென்னிந்திய பிரதிநிதிகள் தங்கிய இடத்துக்கு நேரே தேடிவந்த அரவிந்தர் “எங்கே என் மிஸ்டர் பிள்ளை?” என்று விசாரிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். திலகரோ, வ.உ.சி. தமது மனையில் ஒரு வாரம் தங்கியபோது வ.உ.சி-யை மிகவும் உயர்வாக நடத்தியுள்ளார். அவரது மனையில் மிகவும் கட்டுப்பாடான சூழலில் இருவர் மட்டுமே உணவு அருந்தியவர்கள். ஒருவர் வ.உ.சி. மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். அப்பேர்பட்ட திலகர் மிதவாத தலைவர் கோகலே இறந்தபோது இறுதி யாத்திரைக்கு வ.உ.சி-யிடம் வரச்சொல்லி கேட்டார். வ.உ.சி-யோ மறுத்துவிட்டு, “நீங்கள் போய் வாருங்கள்” என்று கூறிவிட்டார். தாம் கொண்ட கொள்கையில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆனால், பட்டாபி சீதாராமய்யர் எழுதிய காங்கிரஸ் மகா சபை வரலாற்று நூலில் வ.உ.சி-யின் தேச சேவை பற்றி மருந்துக்கும் இடம் இல்லை.
எண்.40, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர் விலாசம் கொண்ட ஒரு கடித நகலில் காந்தியடிகளுக்கு வ.உ.சி. எழுதுகிறார். ‘கடந்த இரண்டாண்டு காலமாக தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் தயவே என் குடும்பத்தைக் காத்து வருகிறது. எனக்கு தரப்பட்ட பணத்தை எனக்கு வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று சொல்வேனானால் அது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் இழைத்த தவறாகும்’ என்று எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வசித்த வேதியப்ப பிள்ளை வ.உ.சி-க்காக உதவ வேண்டி ரூ.5000/- வசூலித்து காந்தியடிகள் மூலம் அனுப்பினார். காந்தி மறந்து போய் அரசியலுக்கு செலவழித்துவிட்டார். கடும் அலைச்சல்களுக்கிடையே எட்டு வருடம் கழித்து வட்டியுடன் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு காந்தியடிகள் வேண்ட, அவர்கள் அனுப்பிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் அதற்கு வட்டியெல்லாம் வேண்டாம் என்று வாங்கினார் வ.உ.சி.
தேசபக்தியின் பெயரால் பிராமணர்களின் செல்வாக்கு காங்கிரஸில் அதிகரித்து வந்ததையும் வ.உ.சி. கண்டித்துள்ளார். அதேவேளையில் பிராமணரல்லாத கட்சியினரின் தேச துரோக செயல்களையும் கண்டித்துள்ளார். “ராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்று தேச துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம் பிள்ளை என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை” என்று வேதனைப்படுகிறார்.
‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாக பழிக்கப் பெற்றேன் என்று 1927ஆம் ஆண்டு நடந்த சேலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ மாநாட்டில் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நொந்துபோய் பேசியுள்ளார்.
தமது நெருங்கிய அரசியல் சகாக்கள் பாரதியும், சிவாவும் அரசியலில் சமயவுணர்வையும் சேர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி. மிகத் தெளிவாக அரசியலையும், சமயத்தையும் தனித்தனியே கையாண்டார். சைவத்தில் ஊறிப்போயிருந்த வ.உ.சி. சிவஞானபோதத்துக்கு உரை எழுதியதுகூட சைவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அன்றைய இந்தியாவில் வ.உ.சி. தென்னகம் கடந்த மிக உயர்ந்த தலைவராக மதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு ஓர் உதாரணம்... 1907 சூரத் காங்கிரஸ் மகாநாட்டுக்கு நூற்றுக்கு மேற்பட்ட நபர்களை சென்னையிலிருந்து அழைத்துச் செல்லும்போது பாதிச்செலவை வ.உ.சி. தானே ஏற்றுக்கொண்டார். மீதிச் செலவை மண்டையம் சீனிவாசச்சாரி ஏற்றுக்கொண்டார். 1919ஆம் ஆண்டு அமிர்தசரஸ் காங்கிரஸ் மகாசபைக்கு செல்ல வ.உ.சி-க்கு ஆசை ஏற்பட்டது. கையில் பணம் கிடையாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர், தண்டபாணி பிள்ளையிடம் ரயிலில் முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கும்படி பணத்தை கொடுத்துள்ளார். தண்டபாணி பிள்ளை வ.உ.சி-யை மனதில் எண்ணிக்கொண்டு அப்பணத்தில் அமிர்தசரஸ் நகருக்கு இரண்டு மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டை எடுத்து, மீதிப்பணத்தை வ.உ.சி. திரும்பி வருவதற்கான செலவுக்கு கொடுத்து விடுகிறார். தந்தை பெரியாரிடம் எதையோ சொல்லி சமாதானப்படுத்தி விட்டார். சென்னையை தாண்டிய ரயில் பூனா நகரம் சென்றடைந்தது. மாபெரும் கூட்டம். மாலை மரியாதைகளுடன் திலகர் சகாவான வ.உ.சி-யை எதிர்நோக்கி காத்திருந்தது. முதல், இரண்டாம் வகுப்பு பயணம் செய்து கொண்டிருந்த தலைவர்கள் தமக்குதான் என்று வெளியே தலையை நீட்ட, வ.உ.சி. எங்கே என்று தேடி மூன்றாம் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்த வ.உ.சி-யைப் பார்த்து “ஜே” கோஷமிட்டு மாலையிட்டு, பழங்கள், பட்சணங்கள் கொடுத்து வாயார வாழ்த்தி வ.உ.சி-யை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.
சென்னை, மயிலாப்பூரில் பரிபூரண விநாயகர் கோயில் தெருவில் வாழ்ந்த வ.உ.சி. வீட்டு வாடகை உயர்த்தப்பட்டதால் குறைவான வாடகை தேடி பெரம்பூர் பகுதியில் சுடுகாட்டுக்கு அருகில் வசித்துள்ளார். சுடுகாட்டுக்கு வரும் பிணத்தை எரிக்கும்போது வெளிவரும் வாசனை தாங்க முடியாமல் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சில காலம் வாழ்கிறார். அச்சமயம் தன் வாழ்நாள் ஜீவனத்தை நடத்த வேண்டி மளிகைக்கடை, நெய்க்கடை, மண்ணெண்ணெய் கடை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டாலும் வாழ்க்கை ஜொலிக்கவில்லை.
திலகர் இறக்கும்வரை அவரது நிதியிலிருந்து வ.உ.சி-க்கு ரூ.50 தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. வ.உ.சி-யின் அறுபதாம் ஆண்டை சிறப்பிக்க டாக்டர் வரதராஜூலு நாயுடு தமிழ்நாடு பத்திரிகையில் நன்கொடை அளிக்க வேண்டி விளம்பரம் செய்தும் பெரிதாக வரவேற்பு இல்லாமல் கைவிடப்பட்டது. வ.உ.சி. தனது குடும்பத்தினருக்கு 26.10.1936இல் உயில் எழுதி அதை நிறைவேற்றுபவராக ஆ.சே.சு. கந்தசாமி ரெட்டியார் அவர்களை நியமிக்கிறார். அந்த உயிலில் தனது கடன்களைக் குறிப்பிடுகிறார். வீட்டு வாடகை பாக்கி ரூ.135, துணிக்கடை பாக்கி ரூ.30, எண்ணெய்க்கடை பாக்கி ரூ.30, சில்லறைக் கடன் ரூ.50, தனிநபர்களுக்குத் தரவேண்டிய கடன் ரூ.86 என்று குறிப்பிட்டுள்ளார். வ.உ.சி-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த உடன்பிறந்த தம்பி மீனாட்சிசுந்தரம் பிள்ளை மனங்கலங்கி பைத்தியமானார். ‘எனது தம்பி மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தமது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
வாழும் வள்ளுவமாக தியாகத்தின் இலக்கணமாக விளங்கிய வ.உ.சி. பழுத்த சைவக் குடும்பத்தில் பிறந்தாலும் தனது இறுதி நிலையறிந்து தேவாரம், திருவாசகம் கேட்பதைத் தவிர்த்து பாரதியாரின் சுதந்திர உணர்ச்சிமிக்க கவிதைகளை கேட்கவே பிரியப்பட்டுள்ளார். தூத்துக்குடி காங்கிரஸ் காரியாலயத்தில் பாரதியார் பாடல்களை படிக்க ஏற்பாடு செய்தவர் பெ. கந்தசாமிபிள்ளை. வ.உ.சி. பாடல்களைக் கேட்டு “என்னை சிறையில் அடைத்து துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே” என்று கூறியுள்ளார். தீபாவளிப் பரிசாக தூத்துக்குடி வக்கீல் சங்கத்தார் ரூ.75 பணமுடிப்பு கொடுத்தார்கள். மறுநாள் 18.11.1936 புதன் கிழமை வ.உ.சி. மரணமடைந்து விட்டார்.

வ.உ.சி. தமிழ் தேசிய இயக்கத்தில் காலூன்றி இந்திய தேசியத்தைப் பார்த்தவர். திலகர், காந்தி ஆகியோர் கீதைக்கு உரையெழுதிய சமயத்தில் வ.உ.சி. தமிழின் அடையாளமாக திருக்குறளுக்கு உரை கண்டவர். வேதாந்த சைவ சமய சித்தாந்த சமயங்களில் நல்ல புலமை கொண்டிருந்த வ.உ.சி. மிகத் தெளிவாக அரசியலையும் சமயத்தையும் தனித்தனியாக மட்டுமே கையாண்டவர். திலகர் அவர் அரசியல் குருவாக இருந்தாலும் தமிழ் சமூகத் தன்மைக்கு ஏற்ப வகுப்பு வாரிய இடஒதுக்கீடு தேவை என்பதையும் வலியுறுத்தியவர். தான் கொண்ட கொள்கையில் எந்த சூழ்நிலையிலும் சமரசமற்று கடைசி வரை வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முனைப்புடன் செயல்பட்டவர்.
பெண் அடிமைத்தன்மையைப் போக்க நினைத்து தன் மனைவியிடம் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிடக்கூடாது என்று சத்தியம் வாங்கியவர். சகஜானந்தர், கண்பார்வை இழந்த விருதுநகர் ராமையா தேசிகர் போன்ற தலித் ஆளுமைகளை தனது வீட்டின் ஒரு அங்கத்தினராகவே ஏற்றுக்கொண்டவர். சிறைக் கொடுமைகளின் மூலமாக வ.உ.சி. அவர்களின் உடல்நலத்தையும், பொருள்நலத்தையும் சிதைப்பதில் வெற்றி கண்ட ஆங்கிலேயே அரசால் அவரது மனஉறுதியை சிதைப்பதில் மட்டும் கடைசிவரை வெற்றி காண முடியவில்லை.
கட்டுரையாளர் குறிப்பு: ரெங்கையா முருகன் - ‘அனுபவங்களின் நிழல் பாதை’ நூலாசிரியர்!

No comments:
Write comments