இந்திய நீதி மன்றங்கள் ஒரே விசயத்திற்காக மாறுபட்ட பல தீர்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் போக்கு தற்போதைய காலகட்டத்தில் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.
குற்றத்திற்கான சட்டங்கள் என்பதே ஒரே சட்டமாக இருந்தாலும் அதனை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏன் மாறுபட்டு வருகின்றனர் என்பதை சட்ட வல்லுனர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கேரளாவில் செளமியா என்ற இளம் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகி சில நாட்கள் கழித்து இறந்த போது அவளை கற்பழித்த கோவிந்த சாமி என்ற நபருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையே கேரள உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது குற்றவாளிக்கு கொலை குற்றத்திற்கான தண்டனையை குறைத்து கற்பழிப்புக்காக மட்டும் 7 வருட தண்டனை வழங்கியது. இதற்காக உச்ச நீதிமன்றம் கூறிய காரணம் விசித்திரமாக இருந்தது. காரணம் குற்றவாளி செளமியாவை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லையாம்.
ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும்போதே மன ரீதியாக அவள் கொல்லப்படுகிறாள் என்பதே நிதர்சனம். இதே பாலியல் குற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கபப்டுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. அப்படியானால் அக்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் ஒரே மாதிரி இருக்கின்றனவா? என்பது கேள்விக்குரியே!
இந்திய நீதித்துறையில் உச்ச நீதிமன்றம் என்பது உச்சபச்ச நீதி சபையாகும். அதில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் அந்த தீர்ப்பினை மாற்ற யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அதை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும். இதற்கு சில விதிவிலக்குகள் இருக்கிறது என்றாலும் நீதித்துறையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அடுத்து வழக்காடுவது என்பது கிடையாது. ஆனால் உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றங்களுக்குமிடையேயான முரண்பாடுகள் எக்கசக்கமாக இருக்கிறது என்பதை ஒரு சில வழக்குகளை அலசிப்பார்த்தாலே தெளிவாக புரிகிறது.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிடுவதற்கு தடை விதித்தது. இதற்காக சொல்லப்பட்ட காரணம் முறையான பலி கூடங்கள் தமிழகத்தில் இல்லை என்பதே. இதே போன்ற மற்றொரு பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிகோத்ரி தாக்கல் செய்த மனுவில் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்கள் பலியிடப்படுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும், மத ரீதியான விசயங்களில் விலங்குகள் பலியிடுவதற்கு அனுமதி என்ற 28வது பிரிவை விலங்குகள் வதை சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென கூறியிருந்தார்.
ஆனால் இவ்வழக்கை ஒரு வாதத்தை கூட விசாரிக்க முன்வராமல் உச்ச நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மனுதாரம் தாம் இந்த வழக்கை வாபஸ் பெருவதாகவும், இதனை தொடர்ந்து இவ்வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எந்த அடிப்படையில் ரஞ்சனா தாம் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல அனுமதி வேண்டினார்? நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் விசாரணைகள் வித்தியாசப்படும் என்ற நம்பிக்கையிலேயே இதனை அவர் செய்திருக்கிறார்.
ஒரே மாதிரியான தீர்ப்பு ஒரே மாதிரியான வழக்குகளுக்கு வழங்கப்பட்டால் தான் நீதித்துறை சிறப்பாக செயல்படுகிறது என அர்த்தம். அப்படி இல்லாத பட்சத்தில் நீதித்துறையில் கோளாறு இருப்பதையே காட்டுகிறது. இப்படி கோளாறுகள் இருக்க நீதித்துறையை மதிக்கும் போக்கோ, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையோ ஏற்படப்போவதில்லை என்பதே நிதிர்சனம்.
- புகழேந்தி

No comments:
Write comments