மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் மற்றும் யோகா பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அந்த மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை எதிர்த்து மசூத் அன்சாரி என்பவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பொது நல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கக் கூடாது என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பிருஹன் மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அந்த மனு, நீதிபதி மஞ்சுளா செல்லூர் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரிய நமஸ்காரம் என்பது வெறும் பெயர்தான் என்று தெரிவித்த நீதிபதிகள் அதனை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Write comments