Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்!


சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுரை வழங்கியது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது,

இந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு 19ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 74.645 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் பிலிகுண்டுலு பகுதியில் 24.593 டி.எம்.சி. தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் குறைவான அளவே தண்ணீர் இருப்பதால் காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

எனவே தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதில் 25 டி.எம்.சி தண்ணீரை 10 நாட்களுக்குள் திறக்கவும், மீதமுள்ள தண்ணீரை செப்டம்பர் மாதம் 3 வாரங்களுக்குள் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு எப்போதும் மதிப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை என்று காரணம் காட்டி தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடுவதில்லை. இது தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 50.052 டி.எம்.சி. தண்ணீரை வழங்காததால் சம்பா பயிர் சாகுபடி பாதிப்பு அடைந்து உள்ளது.

காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து மிகவும் தெளிவாக வரையறுத்து இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீருக்காக தமிழகம் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டிய கட்டாயத்தை கர்நாடக அரசு ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை தமிழக விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு உரிய 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் என கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் திறந்து இருக்க வேண்டிய தண்ணீரின் அளவு பற்றிய விரிவான பட்டியல் நீதிபதிகளிடம் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டது.

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதாடுகையில் கூறியதாவது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு தன்னால் இயன்ற அளவு தண்ணீரை தமிழகத்துடன் பங்கிட்டுகொள்கிறது. கர்நாடக அணைகளில் சில ஆண்டுகள் தேவையான அளவுக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பங்கீட்டை மேற்பார்வை செய்வதற்கு மத்திய அரசு காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் பங்கீடு குறித்து தமிழக அரசுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின், இந்த மேற்பார்வை குழுவை அணுகலாம்.

நடைமுறை பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளாமல் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறது. காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை டி.எம்.சி. தண்ணீரை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே வரையறுத்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் திறக்க வேண்டிய தண்ணீர் அளவு குறித்து எதுவும் கூறவில்லை. மேலும் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் செய்ய வேண்டிய பங்கீடு குறித்தும் ஏதும் வரையறுக்கவில்லை. தற்போது கர்நாடக அணைகளில் தேக்கிவைக்கப்பட்டுள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கிறது. எனவே அதிக அளவு தண்ணீரை திறந்து விடுவது இயலாத காரியமாக உள்ளது என கூறினார்.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது, இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ‘வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும். 

தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் வருகிற திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவின் மீதான விரிவான விசாரணை திங்கட்கிழமை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனுவை கர்நாடக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த பதில் மனுவில், தங்கள் அணைகளில் இந்த ஆண்டு குறைவான அளவு தண்ணீரே இருப்பதால், அதிக அளவு தண்ணீரை திறந்து விடுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic